பல ஆச்சரியங்களையும் இயற்கையின் பொக்கிசங்களையும் தன்னகத்தே கொண்ட பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசன் காடுகள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன.

5.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் படர்ந்து விரிந்திருக்கும் அமேசன் மழைக்காடு  பிரேசில், பிரன்ச் கயானா, சுரினம், ஈக்குவடோர்,பொலிவியா, பெரு,கொலம்பியா,வெனிசுவேலா உள்ளிட்ட 9 நாடுகளில் பரவியுள்ளது. 

இந்நிலையில் பிரேசிலில் உள்ள அமேசன் காடுகளில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிகிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அமேசன் மழைக் காடுகள் பலமுறை பற்றி எரிகிறது என எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிலையம்.

2018 தரவுகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு இதுநாள் வரை மட்டும் அமேசன் மழைக் காடுகள் பற்றி எரியும் சம்பவம் 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

பிரேசிலில் இந்த 8 மாதங்களில் மட்டும் 75,000 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

குறிப்பாக பிரேசிலின் ரொரைமா, ஆக்ரி, ரோந்தோனியா மற்றும் அமசோனாஸ் ஆகிய பகுதிகள் இந்த காட்டுத் தீ சம்பவங்களால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

ஏன் காட்டுத் தீ?

அமேசன் காடுகளில் காட்டுத் தீ சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வது  வழக்கம்.  ஜூலை மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம்  வரைளிலான காலப்பகுதிகளில்  இயற்கையாக அதாவது மின்னல் தாக்கம் காரணமாக காட்டுத் தீ ஏற்படும். ஆனால், மரம் வெட்டுபவர்கள், விவசாயிகள் நிலத்தை தங்கள் தேவைக்காக பயன்படுத்தி கொள்வதற்காக தீ வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அமேசன் காடுகளில் இவ்வாறான காட்டுத் தீ ஏற்பட வலதுசாரி கருத்தியல் கொண்ட பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூதான் காரணம் என்று சூழலியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அதாவது பொல்சனாரூ அரசின் கொள்கைகள் காட்டு அழிப்பை ஊக்குவிக்கிறது. காடுகளை அழித்து விவசாயம் செய்ய, மரங்கள் வெட்ட, வனத்தை மேய்ச்சல் நிலமாக மாற்ற அவர் ஊக்குவிக்கிறார் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.

இயற்கைக்கான உலகளாவிய நிதி அமைப்பும், காட்டு அழிப்புதான் இந்த காட்டுத்தீக்கு காரணமென குற்றஞ்சாட்டுகிறது.

இப்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க சரியான முயற்சிகளை எடுக்கவில்லை என அவர்கள் சூழலியலாளர்கள் கூறுகிறார்கள்.

பொல்சனாரூவும் அமேசான் தீ தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், போதுமான வசதிகள் இல்லாததால் எங்களால் 40 தீயணைப்பு வீரர்களை மட்டுமே அனுப்ப முடியும்" என்ற தொனியில் பதில் அளித்தார்.

மேலும் அவர், இந்த காட்டுத்தீ சம்பவங்களுக்கு அரசுசாரா அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என குற்றஞ்சாட்டினார்.

"அரசுசாரா அமைப்புகளுக்கன நிதியை குறைத்தால் அதற்கு பழிவாங்க அவர்கள் இப்படி செய்திருக்கலாம்" என்றவரிடம், இதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, "நான் அவர்கள் மீது சந்தேகம்தான்படுகிறேன். குற்றஞ்சாட்டவில்லை" என்றார்.

பருவநிலை மாற்றத்தை ஒப்புக் கொள்ளாதவர் வலதுசாரி சித்தாந்தம் மீது நம்பிக்கை கொண்ட பொல்சினாரூ. தேர்தல் பிரசாரத்தின் போதே, "பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவேன்" கூறி இருந்தார்.

பாதிப்புகள்

இந்தக் காட்டுத் தீ மற்றும் காட்டழிப்பு  ஆகியவற்றால் முதலில் பாதிக்கப்படுவது அமேசன் காடுகளில் வாழும் பழங்குடிகள்தான்.

ஏறத்தாழ 9 லட்சம் பழங்குடிகள் பிரேசிலில் உள்ள அமேசன் வனப்பகுதியில் வாழ்கிறார்கள். அமேசனுக்கு ஏற்படும் எந்த சிறு பாதிப்பும் முதலில் இவர்கள் மீதுதான் தாக்கம் செலுத்தி வருகிறது.

அமேசன் காடுகளுக்கு எதிரான நடவடிக்கையை தங்களுக்கு எதிரான நடவடிக்கையாக கருதும் இவர்கள் பொல்சனாரூ அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

உலக நாடுகள் கவலை

அமேசனில் தானே காட்டுத்தீ இதற்காக நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்பதற்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோங்கின் டுவிட்தான் பதில், 'நம் வீடு பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது' என்கிறார். மேலும் இந்த புவியின் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை அமேசன் காடுகள்தான் உருவாக்குகின்றன. இதுவொரு சர்வதேச நெருக்கடி என டுவிட் செய்துள்ளார்.

நாம் அனைவரும் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டுமானால் அமேசன் உயிருடன் இருக்க வேண்டும்.

'World Wildlife Fund For Nature ' என்ற சுற்றுச்சூழல் அமைப்பு, “ பூமியின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகளில் அழிப்பு அதிகமானால், பூமியில் அதிகளவில் கார்பன் வாயு பரவ நேரிடும். இது பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய பங்காகவும் ஆகிவிடும்” என எச்சரித்துள்ளது.