(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

சாலிந்த திசாநாயக்க வடக்கில் இருந்த பல தமிழ் குழுக்களுடன் சிறந்த தொடர்ப்பை ஏற்படுத்தி வந்தவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற சாலிந்த திஸாநாயக்கவின் அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சாலிந்த திஸாநாயக்க பாராளுமன்றம், மாகாணசபைகளுக்கு வருவதற்கு முன்னரே அவரை அறிந்திருந்தேன். அதாவது விஜேகுமாரதுங்கவின் மறைவை தொடர்ந்து மஹஜன கட்சி உறுப்பினராக இருந்து சந்திரிக்கா குமாரதுங்கவின் பாதுகாப்புக்கு பொறுப்பானவராக இருந்தார்.

 1971காலப்பகுதியில் அவர் மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்டு சிறிதுகாலம் சிறைவாசம் அனுபவித்து வந்தார்.

மேலும் அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்து இரசாணய பொறியியலாளராக பட்டம் பெற்றவர். அதனைத்தொடர்ந்தே அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 

அவருக்கு இன்னுமொரு பொறியியலாளருடன் தொடர்பு இருந்தது. அதாவது உமா மகேஷ்வரனுடன் சிறந்த தொடர்ப்பு இருந்தது. உமா மகேஷ்வரன் அவரை வன்னிக்கு அழைத்துச்சென்று, சந்திரிக்கா குமாரதுங்கவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயுத பயிற்சிகளை பெற்றுக்கொடுத்தார். 

அதன் மூலம் அவருக்கு வடக்கில் இருந்த பல குழுக்களுடன் தொடர்ப்பு ஏற்பட்டிருந்தது. அதுதொடர்பில் அவருக்கு சிறந்த அனுபவம் இருந்தது. அந்த காலப்பகுதியில்தான் நான் அவரை ஆரம்பமாக சந்தித்தேன்.

அதனைத்தொடர்ந்தே அவர் வடமேல் மாகாணசபைக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றதுடன் பாராளுமன்றத்துக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு தெரிவானார். அவர் ராஜாங்க, பிரதி மற்றும் அமைச்சராக இருந்துள்ளார். இறுதியில் அவர் பொதுஜன பெரமுன கட்சி அரசியல் செயற்பாட்டில் இருந்த நிலையிலே எம்மைவிட்டு மறைந்தார்.

 எனவே அவரின் மறைவால் துயருறும் அவரின் குடும்பத்துக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.