நிலாவினை முதல் முறையாக புகைப்படம் எடுத்து சந்திரயான் 2 விண்கலம் அனுப்பி உள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ஆம் திகதி விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2, புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, கடந்த 14-ஆம் திகதி நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது.

ஆறு நாட்கள் பயணத்தை முடித்த பின்னர், விண்கலத்தை நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைக்கும் முயற்சியை திட்டமிட்டபடி கடந்த செவ்வாய்க்கிழமை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர். அதன் மூலம், நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த விண்கலம், நிலவில் இருந்து குறைந்தபட்சம் 114 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 18,072 கி.மீ. தொலைவையும் கொண்ட பாதையில் வலம் வந்தது.

இந்த நிலையில், விண்கலத்தின் முதல் சுற்றுவட்டப் பாதையின் அளவைக் குறைக்கும் நடவடிக்கையை நேற்று விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர். திட்டமிட்டபடி  விண்கலத்தில் உள்ள என்ஜினை 20 நிமிடங்கள் இயக்கி, நிலவை வலம் வரும் விண்கலத்தின்  சுற்றுவட்டப் பாதையைக் குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  அதன் மூலம், விண்கலம் இப்போது நிலவிலிருந்து குறைந்தபட்சம் 118 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 4,412 கி.மீ. தொலைவையும் கொண்ட சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. விண்கலத்தின் செயல்பாடுகள் இப்போது சிறப்பாக இருக்கின்றன என இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திராயன் 2, நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது.