ஆர். பார்த்திபன் இயக்கி தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஒத்த செருப்பு 7’ ஆசிய சாதனைப் புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம்பெற்றிருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என அனைத்து துறை பணிகளையும் ஒருவரே ஏற்று, உருவாக்கிய திரைப்படம் ‘ஒத்த செருப்பு 7’. இதற்காகவே இந்த திரைப்படம் ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. இதற்காக இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ், சமுத்திரகனி ஆகியோர்கள் இயக்குனர் பார்த்திபனை பாராட்டியிருக் கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குனர் பார்த்திபன் தெரிவிக்கையில்,

“ஒத்த செருப்பு திரைப்படம் இம்மாதம் முப்பதாம் திகதியன்று வெளியாகும் என முன்பு அறிவிக்கப் பட்டிருந்தது. தற்பொழுது சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா மற்றும் லண்டனில் நடைபெறும் கோல்டன் குளோப் விருதிற்கான சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் செப்டெம்பர் மாதம் பங்குபற்றி திரையிடப்படவிருக்கிறது. 

இது போன்ற பரீட்சார்த்த முறையிலான திரைப்படத்தை ரசிகர்களுக்கு திரையிடும் முன், அதுகுறித்த ஆர்வத்தை அதிகப்படுத்துவதற்காக சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படத்தை திரையிடுகிறோம். அதனால் ரசிகர்களுக்கு ஒக்டோபர் மாதம் இத்திரைப் படம் வெளியாகலாம்,” என பார்த்திபன் தெரிவித்தார்.

பார்த்திபன் மட்டுமே நடித்திருக்கும் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.