(ஆர்.விதுஷா)

இன்று காலை 8 மணிமுதல்  நாளை காலை 8மணிவரையான  24 மணிநேர  அடையாள  வேலை நிறுத்தத்தினை  மேற்கொண்டுள்ள அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்   சங்கம்   கோரிக்கைகளை  நிறைவேற்றுவதற்காக  அரசாங்கத்திற்கு  இரண்டு நாட்கள்  கால அவகாசம்  வழங்கியுள்ளது. 

அதன்போதும்   தீர்வு  காணப்படாவிடின்  முழுமையான  வேலை நிறுத்தத்தில் இறங்கவுள்ளதாக  எச்சரித்துள்ளது.   

அரசாங்க  வைத்தியசாலைகளில்  ஏற்பட்டுள்ள  மருந்துத்தட்டுப்பாடு  , உரிய  வகையில்  வைத்தியர்களுக்கான  இடமாற்றங்கள்  வழங்கப்படாமை  உள்ளிட்ட  8  பிரச்சினைகளை   முன்வைத்தே இந்த  வேலை நிறுத்தப்போராட்டத்தினை    மேற்கொண்டுள்ளனர்.

அதன் அடுத்த  கட்ட  நடவடிக்கைகளை  தெரியப்படுத்தும் வகையில்  ஏற்பாடு  செய்யப்பட்ட   விசேட  ஊடகவியலாளர்  சந்திப்பு    இன்று  வியாழக்கிழமை   சங்கத்தின்  தலைமையகத்தில்  இடம்  பெற்றது. இதன்போது கருத்து  தெரிவித்த  சங்கத்தின்  செயலாளர்  ஹரித அளுத்கே  கூறியதாவது  ,

சுகாதாரத்துறையில் காணப்படும் குறைபாடுகளை  நிவர்த்திசெய்து தருமாறு  தொடர்ந்தும்  வலியுறுத்தி  வந்த போதிலும்  இது வரையில்  எத்தகைய  நடவடிக்கையும்  மேற்கொள்ளப்படவில்லை.    எமது  கோரிக்கைகளை  நிறைவேற்றித்தராவிடின்  வேலை நிறுத்தத்தை  மேற்கொள்வோம்  என  கூறியிருந்த போதிலும்  எத்தகைய  நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.  

ஆகவே  ,  அடையாள  வேலைநிறுத்தத்தினை  மேற்கொண்டிருந்தோம்.  அரசாங்க  பல்வைத்திய சங்கத்தினரும்  ,  அரசாங்க  ஆயுர்வேத  வைத்திய  சங்கத்தினரும்   எமது  போராட்டத்தில்  இணைந்து  கொண்டனர். 

பிரச்சினைகளுக்கு உரிய  தீர்வை  பெற்றுத்தருமாறு  கூறி  அரசாங்கத்திற்கு  இரண்டுவாரங்களுக்கும்  அதிகளவான கால  அவகாசம்  அளித்திருந்த  நிலையிலும்  அரசாங்கம்  எத்தகைய  நடவடிக்கைகளையும்  மேற்கொண்டிருக்கவில்லை.  அரசாங்கத்திற்கு  இரண்டு நாட்கள்  கால அவகாசம்  வழங்கியுள்ளது.அதன்போதும்   தீர்வு  காணப்படாவிடின்  முழுமையான  வேலை நிறுத்தத்தில் இறங்கவுள்ளதாக  எச்சரித்துள்ளது.