தமிழ் சமூ­கத்தின் மீது நம்­பிக்­கை­யின்றி போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு மத்­தியில் இரா­ணு­வத்­தி­னரை தொடர்ந்தும் நிறுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொள்­ளு­மாயின் மற்­றொரு பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுத்தால் எவ­ரையும் குற்­றஞ்­சாட்­ட­மு­டி­யாது என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் சுட்­டிக்­காட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அதே­நேரம் சமஷ்டி பிரி­வினை அல்ல என்­பதை வலி­யு­றுத்­தி­யவர் மத்­திய அர­சாங்­கத்தின் நேர­டித்­த­லை­யீ­டு­களால் வடக்கு மாகா­ண­சபை தொடர்ந்தும் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.

தேசத்தை கட்­டி­யெ­ழுப்­புதல் மற்றும் நல்­லி­ணக்கம் தொடர்­பாக எழுத்­தாளர் குசால் பெரே­ராவின் நூல் வெளி­யீடும் திறந்த கலந்­து­ரை­யா­ட­லொன்றும் கொழும்­பி­லுள்ள இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடை­பெற்­ற­போது பிர­தம பேச்­சா­ள­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

தேசத்தை கட்­டி­யெ­ழுப்­புதல் தொடர்­பாக அவ­தானம் செலுத்­து­கையில் இலங்கை என்­றொரு தேச­முள்­ளது. அதனை கட்­டி­யெ­ழுப்­ப­வேண்­டிய தேவை எமக்கு உள்­ளது. தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­புதல் தொடர்­பாக நாம் கலந்­தா­லோ­சிக்­கி­ன­ற­போதும் நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வது தொடர்­பா­கவே நாம் தற்­போது ஆலோ­சிக்­கின்றோம்.

பல்­வே­று­பட்ட வேறு­பா­டு­க­ளுக்கு மத்­தியில் நாட்­டினை கட்­டி­யெ­ழுப்­பு­வது தொடர்­பாக தற்­போது இங்கு பேசப்­ப­டு­கின்­றது. இலங்­கைத்­தே­சத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­கின்றோம் என்ற நிலைப்­பாட்டில் நாம் இணக்கம் கொண்­டி­ருக்­க­வில்லை.

தேசத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தா­னது ஒரு பாரிய கட்­ட­ட­மொன்­றினை பல்­வேறு தரப்­பி­னரின் ஒத்­து­ழைப்­புடன் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு சம­னா­ன­தாகும். ஆதற்கு பல்­வேறு தரப்­பி­னரின் பங்­க­ளிப்­புக்கள் அவ­சி­ய­மா­கின்­றன. அத­னைப்­போன்றே தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­த­லையும் கூற­மு­டியும்.

தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­தலும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பாக நோக்­கும்­போது சிதை­வு­களை கொண்­டி­ருக்கும் கட்­ட­ட­மொன்றை மீளவும் நிர்­மா­ணிப்­ப­தற்குச் சம­மா­ன­தாகும்.

ஒரு கட்­ட­ட­மொன்றில், தவ­றான திட்­டங்கள், கட்­ட­மைப்பு ரீதி­யான கோளா­றுகள் சுரண்­டல்கள், இயற்­கை­யான கார­ணங்கள் உள்­ளிட்ட பல்­வேறு கார­ணி­களின் அடிப்­ப­டையில் சிதை­வுகள் ஏற்­பட்­டி­ருக்­கலாம். அதே­போன்றே எமது தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­த­லையும் நோக்­க­வேண்­டிய தேவை உள்­ளது.

இல­கு­வான தெரி­வாக கட்­ட­டத்தை முழு­மை­யாக அழித்­து­விட்டு புதிய புதிய கட்­டட வரை­ஞர்கள் ஒப்­பந்­தக்­கா­ரர்­களை வாட­கைக்கு அமர்த்தி ஆரம்­பத்­தி­லி­ருந்து கட்­ட­டத்தை அமைக்க முடியும். ஆனால் அதே கட்­டட கலை­ஞர்கள் அதே தவ­றினை விடு­வார்­களா, இல்­லையா , என்­பது தொடர்பில் நாம் எவ்­வாறு அறிந்­து­கொள்­ள­மு­டியும்?

இதன்­கா­ர­ண­மாக பிரச்­சி­னைக்­கான அடிப்­படை கார­ணங்­க­ளேயே முதற்­ப­டி­யாக நாம் ஆரா­ய­வேண்டும். பிரச்­சி­னைக்­கு­ரிய சரி­யான கார­ணங்­களை கண்­ட­றி­ய­மாலும் தவ­று­களை அடை­யாளம் காணா­மலும் எம்மால் தீர்­வினை வழங்­க­மு­டி­யாது. கார­ணங்­களை கண்­ட­றியும் செயற்­பாடு மிகவும் நேர்­மை­யா­ன­தாக இருக்­க­வேண்டும்.

எனது நோக்கின் அடிப்­ப­டையில் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­புதல் மற்றும் நல்­லி­ணக்­கத்தில் மிகவும் அடிப்­படை நட­வ­டிக்­கை­யாக நேர்­மை­யான சுய­சோ­த­னை­களை மேற்­கொள்­ளப்­படல் வேண்டும்.

சுய­சோ­தனை

அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வொன்றின் அடிப்­ப­டையில் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளக்­கூ­டா­தென சிங்­கள சமூ­கத்­த­வர்­களின் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் நினைக்­கின்­றனர். இதே­ச­மயம் அந்த விசா­ர­ணைக்­கு­ரிய அவ­சியம் இருப்­ப­தாக பெரும்­பான்­மை­யான தமிழ் மக்கள் நினைக்­கின்­றனர்.

மக்கள் மத்­தியில் இருக்கும் துரு­வ­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட சமூ­கங்­க­ளுடன் நாம் இதனை எதிர்­நோக்­கு­கிறோம். சுய­சோ­த­னை­யா­னது நல்­லி­ணக்­கத்­திற்­கான முத­லா­வது அடிப்­படை நட­வ­டிக்­கை­யாக இருக்கும். இதனை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அவ­சி­யா­ம­னதும் பார­பட்­ச­மற்­ற­து­மான விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்­ப­தனை வலி­யு­றுத்­து­கின்றோம். எந்­த­வி­த­மான பார­பட்­ச­மற்ற விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டாத நிலையில் ஆயுத குழு­வினர் பூச்­சிய இழப்பு போரை நடத்­தி­னார்கள் என்றோ, அனு­ம­தித்த சேதங்­களை, இழப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள் என்றோ கூற­மு­டி­யாது.

1956ஆம் ஆண்டு முதல் இரண்டாம் தர பிர­ஜை­களை உரு­வாக்­கு­வ­தற்­கான முத­லா­வது அர­சி­ய­ல­மைப்பு படி­யாக கரு­தப்­படும் 1972 அர­சி­ய­ல­மைப்பு வரை சிங்­க­ள­ம­ய­மாக்­கலின் செயற்­பா­டுகள் தொடர்பில் பெரும்­பான்மை சமூகம் மீளாய்வு செய்­ய­வேண்­டிய தேவை உள்­ளது.

உரிமை மறுப்பு

வடக்கு, கிழக்கு மாகாண சபை­களை குறைத்து மதிப்­பீடு செய்தல், திவி­நெ­கும போன்ற சட்­ட­மூ­லங்கள் மூலம் தமிழ் மக்­களை தரப்­ப­டுத்தும் பல்­வேறு நட­வ­டிக்­கைகள் கால­னித்­துவ மாற்­றங்­க­ளுா­டாக குடி­யியல் ரீதி­யான மாற்­றங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த தரப்­ப­டுத்­தல்கள் மூலம் சமத்­து­வத்­துக்­கான அர­சியல் ரீதி­யான உரிமை தமிழ்­பேசும் மக்­க­ளுக்கு மறுக்­கப்­பட்­டி­ருந்­தது.

எதிர்க்­கட்சித் தலைவர் உட்­பட பாரா­ளு­மன்றக் குழு­வி­னர்கள் இரா­ணு­வத்­தி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டி­ருக்கும் தனியார் நிலங்­க­ளுக்குள் சென்­றி­ருந்­தமை தொடர்பில் கடு­மை­யான எதிர்ப்பு கிளம்­பி­யி­ருந்­தமை ஒரு துயரம் நிறைந்த சம்­ப­வ­மா­கவே கரு­தப்­ப­ட­வேண்டும்.

இந்தச் சம்­பவம் தொடர்பில் எதிர்ப்பு தெரி­வித்­த­வர்கள் மறு­மு­னையில் சட்­டத்­திற்கு முர­ணான தேவை­யற்ற கார­ணி­க­ளுக்­காக தனியார் நிலங்­களில் குறிப்­பாக வடக்கு கிழக்கில் இரா­ணு­வத்­தினர் ஊடு­ரு­வி­யி­ருக்கும் அல்­லது ஆக்­கி­ர­மித்­தி­ருக்கும் விடயம் தொடர்பில் மௌன­மா­கவே உள்­ளனர்.

மோதல்­க­ளுக்­கான கார­ணங்கள் தொடர்பில் பரி­சீ­லனை செய்து பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வினை தரு­வ­தற்­கான சுழ­லினை உரு­வாக்­கு­வதே அடுத்த பாரிய நட­வ­டிக்­கை­யாக கரு­தப்­ப­டு­கி­றது.

வர­வேற்பு

அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­திற்­கான முன்­மொ­ழி­வு­களை அர­சாங்கம் கோரி­யுள்­ளமை மிகவும் பாராட்­டத்­தக்­க­தொரு விடயம். அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்கள் தொடர்­பாக வட­மா­கா­ண­ச­பையில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்த தீர்­மாணம் தொடர்பில் பலர் கடு­மை­யான விமர்­ச­னங்­களை வட­மா­காணம் மீது முன்­வைத்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான தீர்­மா­னங்கள் அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது என அவர்கள் குறிப்­பிட்­டி­ருந்­தனர். இதற்­கெ­தி­ராக வழக்கும் தொடுக்­கப்­பட்­டி­ருந்­தது. முதலில் அர­சி­ய­ல­மைப்­பினை திருத்­து­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­படும் ஒவ்­வொரு திருத்­தங்­களும் வரை­யறை ரீதி­யாக அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­ன­தா­கவே உள்­ளது. அர­சி­ய­ல­மைப்பில் மாற்­றங்­களை முன்­வைப்­ப­தற்­காக மக்கள் முயற்­சி­களை மேற்­கொள்­ளும்­போது அது அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணான விட­ய­மென்ற அர்த்­தத்தில் இதனை கூற­வில்லை.

தருணம் உரு­வா­கி­யுள்­ளது

மீண்டும் அர­சியல் நன்­மை­க­ளுக்­காக தொடர்ந்தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதை தவிர்த்து சகல தரப்­பி­னரும் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வினை காண்­ப­தற்கு ஒன்­றி­ணைய வேண்­டிய தருணம் உரு­வா­கி­யுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக வட­மா­காண சபை­யினால் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த தீர்­மானம் நாட்­டினை பிள­வுப்­ப­டுத்தும் ஒன்­றாக சில ஊட­கங்கள் கூறி­யி­ருந்­தன. தமிழ் பேசும் மக்­க­ளுக்­காக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த முன்­மொ­ழி­வுகள் தமது சிங்­கள சகோ­த­ரர்­க­ளுக்­கு­ரிய சம உரி­மைக்­கா­கவே முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தது.

பிரி­வி­னைக்­கான கடு­மை­யான முன்­மொ­ழி­வு­க­ளாக அவை இருந்­தன. பிராந்­தி­யங்­க­ளுக்­கான முன்­மொ­ழி­வுகள் மொழி அடிப்­ப­டையில் ஒன்­றி­ணைக்­கப்­பட வேண்டும். இந்­தியா இதனை செய்­தி­ருந்­த­துடன் தொடர்ச்­சி­யாக அவ்­வாறு செய்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளது. தெலுங்­கானா மாநி­லத்­தினை உரு­வாக்­கி­யி­ருந்­தமை இதற்­கான ஒரு வெற்­றி­க­ர­மான மாதி­ரி­யாகும். நாமும் சிங்­கள பெரும்­பான்மை பகு­தி­களில் பிர­தி­நித்­து­வத்­தையும் கோர­வில்லை. அல்­லது சிங்­கள பெரும்­பான்மை பகு­தி­களை இரண்­டாக பிரிக்­கு­மாறு கோரி­யி­ருக்­க­வில்லை. சிங்­கள பெரும்­பான்மை பகு­தி­க­ளுக்­கு­ரிய தீர்­மா­னங்கள் சிங்­கள மக்­க­ளா­லேயே மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும்.

இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பு

நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு பொது­மக்­களின் காணி­களில் இணு­வத்­தினர் ஆக்­கி­ர­மிப்பு செய்­தி­ருப்­பது சரி­யான விட­ய­மாக இருக்­காது. வடக்கில் சிவில் சுழலை உட­ன­டி­யாக உரு­வாக்­க­வேண்­டி­யது. நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான அடிப்­ப­டை­யாகும். வட­மா­கா­ணத்தில் இரா­ணு­வத்­தினர் தொடர்ந்தும் இருக்­க­வேண்­டு­மென்­ப­தற்­கான பாது­காப்­பான கவ­லைகள் இல்லை.

இரா­ணு­வத்­தினர் குறைக்­கப்­பட்டு கடந்த ஏழு வரு­டங்­களில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான பல­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருந்தால் நாம் ஏற்­க­னவே மீளக்­கட்­டி­யெ­ழுப்­புதல், மீளெ­ழுச்சி, நல்­லி­ணக்கம் போன்­ற­வற்­றுக்­கான பாதையில் பய­ணித்­துக்­கொண்­டி­ருப்போம்.

தமிழ் சமூ­கத்தின் மீது நம்­பிக்­கை­யின்றி போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு மத்­தியில் தொடர்ந்தும் இரா­ணு­வத்­தி­னரை நிறுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொள்­ளு­மா­க­வி­ருந்தால் மற்­றொரு பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுப்­ப­தற்கு எவ­ரையும் குற்­றச்­சாட்­ட­மு­டி­யாது.

முதலில் அர­சியல் பிரச்­சி­னையே

1979ஆம் ஆண்டு மகா­வலி திட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அந்­த­கா­லத்தில் மாகா­ண­ச­பைகள் காணப்­ப­ட­வில்லை.1987ஆம் ஆண்டு மாகா­ண­ச­பைகள் உரு­வாக்­கப்­பட்­டன. ஆனால் இன்­று­வ­ரையில் மகா­வ­லித்­திட்­டத்தின் மூல­மாக ஒரு­துளி தண்ணீர் கூட வடக்கு மக்­க­ளுக்­காக கொண்­டு­வ­ர­வில்லை. ஆனால் மகா­வலி எல் வல­யத்தில் காணப்­படும் மண­லாறு பிர­தேசம் வெலி­ஓ­யா­வாக மாற்­றப்­பட்டு 4ஆயி­ரத்து 500 சிங்­கள குடும்­பங்கள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளன.

தமிழ், சிங்­கள மக்­களின் பிரச்­சி­னைகள் ஒரு­பு­றந்­தள்­ளி­விட்டு மத்­திய அர­சாங்­கத்தின் நேர­டித்­த­லை­யீட்­டுடன் பொரு­ள­தார மேம்­பாடு என்ற வகையில் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் அவையும் முற­யைாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. ஆகவே தான் முதலில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான பிரச்­சி­னைகள், அர­சியல் தீர்வு குறித்த பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும். அதன் பின்னர் அனைத்து மக்கள் பிர­தி­நி­தி­களும் அமர்ந்து பொரு­ளா­தர மேம்­பாடு குறித்த விட­யங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யாடி முடி­வெ­டுக்­க­மு­டியும்.

மூன்று மணி­நே­ரத்­திற்கு முன்­ன­தாக கூட வடக்கின் பூந­கரி பிர­தே­சத்தில் மின்­சா­ரத்தை வழங்­கு­வ­தற்கு சமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்­புதல் என்ற திட்­டத்தின் கீழ் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா, ஹரீன் பீரிஸ் ஆகியோர் இணைந்து இச்­செ­யற்­பாட்டை முன்­னெ­டுத்­துள்­ளார்கள். அதி­கா­ரி­களை அழைத்து அவர்­களை மக்­க­ளி­டத்தில் நேர­டி­யாகச் சென்று இச்­செ­யற்­திட்­டத்தை முன்­னெ­டுத்­துள்­ளாகள்.

அபி­வி­ருத்தி திட்­டங்­களை நாங்கள் வர­வேற்­கின்றோம். ஆனால் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­க­ளாக நாங்கள் இருக்­கும்­போது ஒரு­வார்த்தை கூட கூறாது நேர­டி­யா­கவே இவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பது எவ்­வாறு நியா­ய­மாகும். மக்­க­ளுக்கு இவ்­வா­றான விட­யங்­களை கூறி அவர்­களை விலைக்கு வாங்­கு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றார்கள்.

இதே­போன்­றுதான் 65ஆயிரம் வீட்­டுத்­திட்ட செயற்­பாடும் காணப்­ப­டு­கின்­றது. 2.1மில்­லியன் ரூபா வீடொன்­றுக்கு செல­வி­டப்­பட்டு அத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. அதி­லுள்ள குறை­பா­டு­களை நாம் சுட்­டிக்­காட்டும் போது 85ஆயிரம் மக்கள் விண்­ண­பித்­துள்­ளார்கள் எனக் காரணம் காட்­டப்­ப­டு­கி்ன்­றது. 85ஆயிரம் மக்­க­ளுக்க வீடுகள் அவ­சியம் என்­பது உண்­மைதான். ஆனால் இவ்­வா­றான பொருத்­த­மற்ற வீடுகள் அல்ல.

இவ்­வா­றான பிரச்­சி­னைகள் தொடர்­கின்­றன. மாகாண சபை முழு­மை­யாக புறக்­க­ணிக்­கப்­பட்டு மத்­தியின் ஆதிக்­கத்­துக்கு உட்­பட்டே பொரு­ளா­தார செயற்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆகவே தான் முதலில் அர­சியல் ரீதி­யான பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

விசா­ரணை

ஒரு­நாட்டின் படைகள் மீதே சர்­வ­தேச விசா­ரணை கேரப்­பட்­டுள்­ளது. அவர்கள் நாட்டின் ஊழி­யர்கள். இந்த நாட்டை வழி­ந­டுத்­து­ப­வர்கள். அத­ன­டிப்­ப­டையில் தான் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றி­ருக்­கையில் இரு­த­ரப்­புக்­கி­டை­யி­லான மோத­லின்­போது தவ­றி­ழைத்­த­தாக கூறப்­படும் ஒரு­த­ரப்பு இல்­லை­யென்­ப­தற்­காக தவ­றி­ழைத்­த­தாக கூறப்­படும் மற்­றத்­த­ரப்பை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தக்­கூ­டாது என்­பது நியாயம்.

விசா­ர­ணைகள் நிச்­ச­ய­மாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். விசா­ர­ணை­களின் ஊடாக தவ­றி­ழைக்­கப்­ப­ட­வில்லை என்­பது நிரூ­பக்­கப்­ப­டு­மா­க­வி­ருந்தால் அதனை ஏற்­க­மு­டியும். அதே­போன்று விசா­ர­ணை­களின் பிர­காரம் தவ­றுகள் கண்­ட­றி­யப்­பட்ட சட்ட வரை­ய­றை­க­ளுக்கு உட்­பட்ட அடுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். ஆனால் திட்­ட­மிட்ட முறையில் விசா­ர­ணை­களை தடுக்க முடி­யாது. விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மா­னது.

பொறுப்­புக்­கூ­றலும் நல்­லி­ணக்­கமும்

சில தமிழ்க்­கு­ழுக்­களும், தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­களும் நல்­லி­ணக்­கத்தை அடை­வ­தற்­காக போர்க்­குற்ற விசா­ர­ணை­களை கைவி­டு­வ­தற்கு சாத­க­மான நிலைப்­பா­டு­களை எடுத்­தி­ருக்­கின்­றார்கள். பொறுப்­புக்­கூ­றலை விடுத்து நல்­லி­ணக்­கத்தை அடை­ய­மு­டி­யமா என எழுப்­பட்ட வினா­வுக்கு பதி­ல­ளித்த வடக்கு முதல்வர்,

பொறுப்­புக்­கூறல், நல்­லி­ணக்கம் ஆகிய இரண்டும் ஒன்­றுடன் ஒன்று தொடர்­பற்­றவை. பொறுப்­புக்­கூ­ற­லா­னது சட்­ட­ரீ­தி­யாக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு அதன்­னூ­டா­கவே மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். உதா­ர­ண­மாக பெரும்­பான்மை இனத்­தவர் ஒருவர் இரா­ணு­வத்­தினர் ஒருவர் தவ­றி­ழைத்­து­விட்டார். தமி­ழரே உங்­க­ளுக்கு சில விட­யங்­களை வழங்­கு­கின்றோம்.

தவறு தொடர்­பான விட­யத்தை கைவி­டுங்கள் என கோரு­வ­தாக வைத்­துக்­கொள்வோம். அதனை எவ்­வாறு ஏற்­றுக்­கொள்­வது. அது நீதித்­துறை சார்ந்­தது. தவறு இழைக்­கப்­பட்­டாலோ அல்­லது இழைக்­கப்­படா விட்­டாலோ அது விசா­ர­ணைகள் ஊடா­கவே தெரி­ய­வரும். விசா­ர­ணைகள் இறு­தியில் தான் அடுத்த கட்டம் தொடர்பில் சிந்­திக்க முடியும்.

ஆனால் நல்­லி­ணக்­கத்­திற்­காக பொறுப்­புக்­கூ­றலை கைவி­ட­மு­டி­யாது. இந்த நாட்டில் அவ்­வா­றான விட­யங்கள் நடை­பெ­று­கின்­றன. நீங்கள் இதை­செய்­யுங்கள். நாங்கள் உங்­க­ளுக்­கான விட­யத்தை கைவி­டு­கின்றோம் போன்ற செயற்­பா­டுகள் இடம்­பெ­று­கின்­றன. ஒரு­வர்த்­தகச் செயற்­பாடு போன்ற நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­கின்­றன. மக்­க­ளுக்கு நன்­மை­கி­டைப்­ப­தற்­காக வர்த்­தகப் பேரம்­பே­சல்­களில் ஈடு­ப­டலாம். ஆனால் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­களின் உயி­ரி­ழப்­புக்கள், இன்று சமு­கத்தில் பெண்­களை தலை­மைத்­து­வங்­க­ளாக கொண்டு பரி­த­விக்கும் குடும்­பங்­க­ளுக்­கான பொறுப்புக்கூறலை நல்லிணக்கத்திற்கான பேரம்பேசமுடியாது.

சமஸ்டி

தினேஸ்குணவர்த்தன விக்கினேஸ்வரன் சமஸ்டி தொடர்பாக பேசுகிறார். அதுதொடர்பாக அவருக்க பேச உரிமையில்லை. நாட்டை பிரிக்கப்பார்க்கின்றார். போன்ற கடுமையான கருத்துக்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றார். நான் பிலிப்குணவர்த்தனவை ரோயல் கல்லூரயில் சந்தித்தபோது சமஸ்டி பதகமானது எனக்கூறினேன். அப்போது என் அப்படிக்கூறுகின்றீர்கள். எஸ்.டபிள்யு.டி.பண்டாரநாயக்க 1926ஆம் ஆண்டு சமஸ்டி இந்த நாட்டிற்கு சிறந்தது எனக் கூறியுள்ளார் என்றார். தினேஸ்குணவர்த்தனவின் தந்தையாரும் இடதுசாரியுமான பிலிப்குணவர்த்தன 1958ஆம் ஆண்டு எனக்கு கூறிய பதிலாகும்.

பலவருடங்களாக சமஸ்டியானது பிரிவினை என்றே காட்டப்பட்டு வந்திருக்கின்றது. சமஸ்டி என்பது என்ன எனச் சற்று பார்ப்போம். பிலிப்குணவர்த்தனவின் தாய்வீட்டை எடுத்துக்கொள்வோம். மிகப்பாரிய பிரதேசத்தில் உள்ளது. தினேஸ்குணவர்த்தன, இந்திக குணவர்த்தன உட்பட அனைவரும் ஆரம்பத்தில் அந்த தாய்வீட்டில் தான் இருந்தார்கள். அவர்கள் திருமணம் செய்த பின்னர் அந்த தாய்வீடு அமைந்திருந்த பாரிய காணியில் தான் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பகுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர்கள் அந்த இடத்திலேயே இருந்தர்கள். தற்போதும் இருக்கின்றார்கள். அது தான் சமஸ்டி.

இலங்கையில் மாகாணசபைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதே சமஸ்டி இங்கு உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் மாகாணசபைக்கு காணப்படும் அதிகாரங்கள் தொடர்பில் தான் பிரச்சினைகள் உள்ளன. மத்திய அரசாங்கம் அதிகமான அதிகாரங்களை வழங்கி மாகாணசபைகளை முடக்கி வைத்திருக்கின்றது. அவ்வப்போது அதிகாரங்களை வழங்கினாலும் வலது கையால் தந்து இடது கையால் எடுக்கும் நிலைமையே உள்ளது. ஆகவே தான் நாங்கள் சமஸ்டி அரசியலமைப்பைக்கோருகின்றோம்.

அவ்வாறான அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்திலேயே தனித்துவமான மக்கள் கூட்டம் தமக்கான தீர்மானங்களை எடுப்பதற்கும் நிருவகிப்பதற்கும் வழியேற்படும். இதனால் நாடு பிளவடையாது. ஒருமித்த இலங்கையின் உள்ளே ஏற்பாடுகள் அமையவேண்டுமெனக் கோருகின்றோம். இதன்மூலமே அனைத்து மக்களும் கூட்டுறவுடன் ஐக்கியமாக வாழும் எதிர்காலச்சூழல் ஏற்படும் என்றார்.