பாராளுமன்றத்தில் இழுவைப் படகுகளுக்கு தடைச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டும் இன்று வரை அதை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டும் அது நிறைவேற்றப்படவில்லை என்றால் அதனை கிழித்து குப்பைத் தொட்டியில் போடுங்கள் ஏனெனில் எங்கள் மக்கள் பிரதிநிதிகளும் இது தொடர்பாக வாய் திறப்பதாக இல்லை என வடமராட்சி கடற்தொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் நா.தர்மகுலசிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கடற்தொழில் சமூகம் ஆகிய நாம் நாளாந்தம் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம்.அதில் பிரதான பிரச்சனையாக கடலடடை பிடிப்பவர்களின் அராஜகத்தினை அதிகாரிகளும் பாதுகாப்பு தரப்பினரும் கட்டுப்படுத்துகின்றனர் இல்லை.

ஓர் அனுமதிப்பத்திரத்தை வைத்துக் கொண்டு பலர் கடலடடை பிடிப்பதில் ஈடுபடுகின்றனர்.அவர்கள் ஒரு அனுமதிப்பத்திரத்தினை பிரதியெடுத்து அதன் ஊடாக பலர் மோசடியாக தொழிலில் ஈடுபடுகின்றனர்.

கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளும்,கடற்படையினரும் எமக்கு மீன் பிடிப்பதற்கான பாஸ் உள்ளதா என துருவி துருவி பார்க்கின்றனர்.ஆனால் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து மோசடியாக எமது கடல் வளத்தை அழித்துக் கொண்டிருக்கும் காடையர்களுக்கு பக்கபலமாகவே செயற்படுகின்றனர். இவ்வாறானவர்கள் கடலில் சடடவிரோதமான முறைகளை பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதால் எமது கடல் வளம் அழிந்து கொண்டிருக்கின்றது.எமது திணைக்கள அதிகாரிகளும் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.

இலங்கையில் இழுவை மடி தடை சடடம் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு அது நடை முறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது.நாட்டின் பாராளுமனறத்தில் ஓர் சடடன்மூலம் கொண்டு வரப்பட்டும் அது நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றது என்றால் அதனை கிழித்து குப்பைத்தொட்டியில் போடுங்கள்.எங்கள் பிரச்சனைகளை தீர்ப்போம் என கூறி பாராளுமன்றம் சென்ற எமது பிரதிநிதிகள் இன்றுவரை இது தொடர்பாக வாய் திறந்து கதைக்கவில்லை. மாறாக அரசின் சலுகைகளை பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வதும் மாளிகளைகளை கோடிக்கணக்கில் வாங்குவதிலுமேயே அக்கறையாகவுள்ளனர். 

கடற்தொழிலாளர்கள் ஆகிய நாம் வாழ்வாதாரம் தொழிலை இணைந்து செத்து மடிந்து கொண்டிருக்கின்றோம்.ஆனால் எமது மக்கள் பிரதிநிதிகள் தென்னிலங்கையினருடன் எலும்புத் துண்டுகளை  உண்டு தங்களின் குடும்பத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இனியும் இவர்களை நாம் நம்பி ஏமாற தயாரில்லை.இனிவரும் பாராளுமனற தேர்தலில் யாழ்மாவடட அனைத்து கடற்தொழில் சமாசங்களும் இணைந்து சுயேட்சைக் குழு ஒன்றின் ஊடாக தேர்தலில் போட்டியிடவுள்ளோம்.எமது வலி,பிரச்சனைகளை உணர்ந்த கடற்தொழில் சார்பாக ஓர் பிரதிநிதியை பாராளுமனரத்துக்கு அனுப்பி வைப்பது என தீர்மானித்துள்ளோம்.அது முடியாது போனால் அனைத்து கடற்தொழில் சமூகமும் தேர்தல்களை புறக்கணிப்பது என தீர்மானிக்கவுள்ளோம்.என்றார்