இலங்கை இராணுவத்திற்கு புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர்  வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

“மனிதகுல வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற கொடூரமான இனப்படுகொலைகளில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த ஈழத்தமிழர் படுகொலைதான் மிகக் கொடூரமானதாகும். அந்தப் படுகொலைகளை நடத்திய சிங்கள ராணுவத்தின் கமாண்டர் தான் சவேந்திர சில்வா.

கடந்த ஜனவரி மாதம், சிங்கள இராணுவத்தின் இரண்டாவது உயர் பதவிக்கு சவேந்திர சில்வாவை, அதிபர் மைத்ரிபால சிறிசேனா நியமித்தபோதே தமிழர்கள் தலையில் இடி விழுந்தது. இப்போது தலைமைத் தளபதியாக நியமித்துள்ளார். கொலைகார ராஜபக்ஷ அரசில் இராணுவ மந்திரியாக இருந்த சிறிசேனவும் இனப்படுகொலைக் குற்றவாளியே. இவர்கள் மூவருமே உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

சவேந்திர சில்வா நியமனத்திற்கு அமெரிக்க அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல நாடுகளின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்திய அரசு கண்டிக்கவில்லை. காலம் மாறும், ஈழத்தமிழர் பிரச்னையின் பரிமாணமும் மாறும். இனப்படுகொலை குற்றவாளிகள் தப்ப முடியாத சூழ்நிலை ஏற்படும்” என அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.