(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம் )

மக்கள் வங்கியின் நற்பெயரை பாதுகாத்து மேலும் வலுப்படுத்தும் நோக்கிலே வங்கியின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்கின்றோம். மாறாக மக்கள் வங்கியை விற்கப்போவதாக எதிர்க்கட்சியினர் தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் வங்கி(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்கள் வங்கி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வங்கி நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் திட்டத்திலே அரசாங்கம்  நடவடிக்கை எடுத்துவருகின்றது. 

ஆனால் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி பிழையாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகின்றது. அதனால் மக்கள் வங்கி ஊழியர்கள் மதியபோசணை நேரத்தில் நேற்று எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் வங்கி திருத்தச்சட்ட மூலம் தொடர்பில் பிழையான கருத்தை தெரிவித்து வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் கணக்காளர்கள் மத்தியில் வங்கி தொடர்பில் நம்பிக்கையை இல்லாமலாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 இதன் மூலம் மக்கள் வங்கியின் நற்பெயருக்கே பாதிப்பு ஏற்படுகின்றது. அத்துடன் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள்  பணத்தை மீட்டிக்கொள்ளும் அபாயம் இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.