(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டிலே  சுதந்திர கட்சியின் தலைவர்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார். ஐக்கிய தேசிய  கட்சியுடனான தேசிய அரசாங்கத்தில்   சுதந்திர கட்சி ஒன்றினைந்தமையே கட்சியின் பலவீனத்திற்கு பிரதான காரணம். மீண்டும் புத்துணர்வு பெற   வேண்டுமாயின் பொதுஜன பெரமுனவுடன் இணைந்தே சுதந்திர கட்சி செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் கலந்துக் கொண்ட சுதந்திர கட்சியின் உறூப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று  நடவடிக்கைகள் மேற்கொள்வதாக கட்சியின் பொதுச்செயலாளர் உட்பட ஒரு சிலர் கடுமையான விமர்சனங்களை எமக்கு எதிராக முன்வைத்தார்கள். ஆனால் நேற்று முன்தினம் இரவு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஏற்பாடு செய்த சிநேக பூர்வமான  விருந்துபசாரத்தில்   கலந்துக்  கொண்டுள்ளார்கள். இதற்கு சுதந்திர கட்சியின் தலைவரும் முழுமையான அனுமதி வழங்கியுள்ளார் என்றே அறிய முடிகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர்  மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக ஒருபோதும் செயற்பட மாட்டார். கடந்த காலங்களில் அரசியல் ரீதியில் முன்னெடுத்த ஒரு சில தீர்மானங்களின் எதிர் விளைவுகளின் தாக்கமே தற்போது  சுதந்திர கட்சியினை இரண்டாம் நிலையாக்கியுள்ளது. ஆகவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவிற்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டிலே ஜனாதிபதி உள்ளார்.

அத்தோடு, அமைச்சர் சஜித் பிரமதாஸவை தவிர்த்து பிறிதொருவரையே பிரதமர் ஐ.தே க. வின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பார். ஆளும் தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளராக  சபாநாயகர் கருஜய சூரிய களமிறக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகளே அதிகமாக காணப்படுகின்றது.  

பிரதமர் எவரை களமிறக்கினாலும் நாட்டு மக்கள் அவரை புறக்கணிப்பார்கள். கோத்தபய ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்மே தோற்றம் பெறும் என்றார்.