(எம்.மனோசித்ரா)

 சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு அதிருப்தி தெரிவிப்பதன் மூலம் தமிழ் மக்களை தூண்டிவிட்டு இனவாதத்தை ஏற்படுத்தவே அமெரிக்கா முயற்சிக்கிறது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் வெளியிடும் கருத்துக்கள் மூலம் விடுதலைப் புலிகளுக்கும், புலம் பெயர் தமிழர்களுக்கும்  அமெரிக்கா ஆதரவளிக்க முயல்வது தெளிவாகின்றது எனவும் தெரிவித்தார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா , கனடா உள்ளிட்ட நாடுகள் விடுதலைப் புலிகளுக்கும் , புலம்பெயர் தமிழர்களுக்கும் ஆதரவளிப்பது போன்று செயற்படுபவையாகும். சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு அதிருப்தி தெரிவிப்பதன் மூலம் தமிழ் மக்களை தூண்டிவிட்டு இனவாதத்தை ஏற்படுத்தவே அமெரிக்கா முயற்சிக்கிறது. 

சவேந்திர சில்வா மீது யுத்தக்குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டன. எனினும் விசாரணைகள் மூலம் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையற்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை இராணுவத்தளபதியாக நியமித்ததில் எவ்வித தவறும் கிடையாது. 

இவ்வாறு இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடுவதன் மூலம் எமது நாட்டின் சுயாதீனத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இலங்கை சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளை சுதந்திர கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்பதோடு, ஜனாதிபதி எடுக்கும் சகல முடிவுகளும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.