இந்தியாவில்  உத்திர பிரதேச  மாநிலம் பஹேடியில் நேற்று காலை வரதட்சணை கொடுமையின் காரணமாக மாமியார் ஒருவர் தனது மருமகளின் வாயில் அசிட்டை ஊற்றி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை யசோதை என்ற பெண், தனது கணவரும் மாமியாரும் எதையோ கொடுத்து தன்னை பருகும் படி வற்புறுத்துவதாக அவரின் தந்தைக்கு தொலைபேசி வழியாக தகவலொன்றை வழங்கியுள்ளார்.

இது குறித்து, தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், தனது மகனுடன் யசோதையின் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே மகள் யசோதை தரையில் கிடந்தை கண்டுள்ளார்.

இந்நிலையில், யசோதையின் கணவரும் மாமியாரும் குறித்த வீட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

பின்னர், யசோதையின் தந்தை யசோதையை வைத்தியசாலைக் கொண்டு சென்றபோது வைத்தியர்கள், ஏற்கனவே யசோதை இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள்.

இச்சம்பவம்  குறித்து தெரியவருவதாவது,

யசோதாவுக்கு கடந்த வருடம் பெப்ரவரி 17 ஆம் திகதி திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் வரதட்சணை  கொடுமை காரணமாக, பலமுறை யசோதையின் சொந்த வீட்டிற்கு மாமியாரால் திருப்பி அனுப்பி வைக்கபட்டிருந்தார். பின்னர் யஷோதா தனது கணவர் மற்றும் மாமியார் மீது வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் முறைப்பாடு அளித்திருந்தார். 

அதன் பின்னர், நீதிமன்ற உத்தரவின் படி,  யசோதாவை  அவரின் கணவன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டுள்ளார் ஆனாலும் அதன் பிறகும் வரதட்சணை கொடுமை முடிவுக்கு வரவில்லை. அதன் விளைவே தற்போது யசோதாவை கொலை செய்யும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.

யஷோதாவின் குடும்பத்தினரால் கணவர் மற்றும் மாமியார் மீது மீண்டும் கொலை குற்றத்திற்காக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.