(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக லக்ஷ்மன் கிரியெல்லவை நியமிக்கவேண்டும். இவ்வாறு நியமித்தால் அவருக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஆனந்த அளுத்தகமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது கண்டி மாவட்ட உறுப்பினர் ஆனந்த ஆனந்த அளுத்தகமகே வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அவரின் கேள்விக்கான பதிலை ஆளும்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க சபைக்கு சமர்ப்பித்தார்.

இதன்போது இடைக்கேள்வியொன்றுக்காக எழுந்த ஆனந்த அளுத்தகமகே, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சஜித் பிரேமதாச எமது கேள்விக்கு முறையான பதிலை வழங்காமல் ஜனாதிபதி வேட்பாளராக கனவு கண்டு வருகின்றார். அதற்காக  பிரசாரம் செய்து திரிகின்றார். வீடுகளை கையளிக்கும் நிகழ்வுகளுக்காக பாரியளவில் விளம்பரத்துக்காக மக்களின் பணத்தை செலவிட்டு வருகின்றார். ஆனால் பாராளுமன்றத்துக்கு வருவதில்லை.

அதனால் தினந்தோரும் பாராளுமன்றத்துக்கு வரும் லக்ஷ்மன் கிரியெல்லவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடுங்கள். அவர் எதையாவது செய்வார். எமது மாவட்ட உறுப்பினர் என்றவகையில் அதற்கு நாங்களும் ஆதரவளிப்போம் என்றார்.

இதன்போது எழுந்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, நான் ஜனாதிபதி வேட்பாளரானால் நீங்கள் எனக்கு ஆதரவாக இருப்பீர்களா என்று கேட்டார்.

அதற்கு ஆனந்த அளுத்தகமகே பதிலளிக்கையில், நிச்சயமாக நான் மாத்திரமல்ல, என்னுடன் இன்னும் சிலர் இன்றே உங்களுக்காக செயற்பட வருவோம் என்றார்