கலிபோர்னியாவின் ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு பலரை கொலை செய்ய திட்டமிட்ட நபரை கைதுசெய்துள்ளதாக அமெரிக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கலிபோர்னியாவில் தான் பணியாற்றும் மரியட் ஹோட்டலிற்கு வருபவர்களையும் அங்கு பணியாற்றுபவர்களையும் துப்பாக்கி பிரயோகத்தின் மூலம் கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்தார் என சந்தேகத்தின் பேரில் ரொடடொல்போ மொன்டியோ என்ற 37வயது நபரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சக ஊழியர் ஒருவர் வழங்கிய தகவலை தொடர்ந்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பலரை உயிரை பறிக்ககூடிய தாக்குதலை மேற்கொள்வதற்கான தெளிவான திட்டத்தையும் ஆயுதங்களையும் குறிப்பிட்ட நபர் வைத்திருந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டலில் காணப்படும்  மனிதவள விவகாரம் குறித்து அதிருப்தியடைந்திருந்த நபர்  அங்கு வருபவர்கள் பணியாற்றுபவர்கள் அனைவரையும் படுகொலை செய்ய திட்டமிட்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நவீன ஆயுதங்கள் உட்பட பல பொருட்களை கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படுகொலைகளிற்கு திட்டமிட்ட பலரை கடந்த வாரம் கைதுசெய்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த வாரம் இடம்பெறவிருந்த மேலும் மூன்று துப்பாக்கி வன்முறைகளை தடுத்துநிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோவாக் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் துப்பாக்கி வன்முறையில் ஈடுபடுவது குறித்து முகநூலில் விருப்பம் வெளியிடப்பட்ட 22 வயது இளைஞனை கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று புளோரிடாவிலும் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனது முன்னாள் காதலிக்கு துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டு படுகொலைகளில் ஈடுபடப்போவதாக  குறுஞ்செய்திகளை அனுப்பிய 25 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்று ஒகையோவில்  இளைஞன் ஒருவனை கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.