(எம்.சி.நஜிமுதீன்)

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தவாரம் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். பேச்சுவார்த்தையின் போது உத்தேச அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட   வேண்டிய முஸ்லிம்களின் பரிந்துரைகள் பற்றி முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளன.

உத்தேச அரசியலமைப்பில்  முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு முன்வைப்பதற்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிரேஷ்ட அரசியல்வாதியான இராஜாங்க அமைச்ச்ர் ஏ.எச்.எம்.பௌஸியின் தலைமையில் ஓரணியாக இணைந்து செயற்படுவதற்கு ஏற்கனவே தீர்மானித்தனர். அதனடிப்படையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதலாவது சந்திப்பை நடத்தினர்.

அதன்போது உத்தேச அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி அவதானம் செலுத்தப்பட்டதுடன்  ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களின் எழுத்து மூலமான பிரேரணைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.. மேலும் கடந்த கால ஆட்சியின்போது  நாட்டில் முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட சவால்கள் இனியொருபோதும் இடம்பெறாமல் தடுப்பதற்கு சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்தந்த சந்தர்ப்பங்களில் ஓரணியில் இணைந்து செயற்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டது.