இத்தாலியின் சர்தீனியா தீவில் உள்ள கடற்கரைகளில் வெள்ளை மணலை சுற்றுலா நினைவாக போத்தலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை விதிக்கப்படவுள்ளது.

சர்தீனியா தீவில் உள்ள கடற்கரைகளில் வெள்ளை மணல்  மிகவும் மென்மையாகவும், பொன்னிறமாகவும் இருக்கும். இந்த மணலை சுற்றுலா பயணிகள் அள்ளி செல்வதால் அங்குள்ள கடற்கரைகள் அழிவு பாதையை நோக்கி செல்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே கடற்கரை மணலை எடுத்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் அங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் பிரான்ஸை சேர்ந்த ஒரு இளம் தம்பதி அண்மையில் சர்தீனியா தீவுக்கு சுற்றுலா சென்று சுற்றுலாவை முடித்துவிட்டு, பிரான்ஸ் திரும்ப படகு ஏறுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களது காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் 14 பிளாஸ்டிக் பாட்டில்களில் 40 கிலோ எடைகொண்ட கடற்கரை மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடற்கரை மணலை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸார் அந்த தம்பதியை கைது செய்தனர்.

ஆனால், தாங்கள் செய்தது சட்டத்துக்குப்புறம்பான செயல் என்பது தங்களுக்கு தெரியாது என்றும், சுற்றுலா வந்ததன் நினைவாக கடற்கரை மணலை எடுத்து செல்ல முயன்றதாகவும் அந்த தம்பதி கூறினர். எனினும் அதனை ஏற்க மறுத்த பொலிஸார் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை உள்ளூர் அந்நாட்டின் நீதிமன்றில் நடந்து வருகிறது.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 3000 யூரோ அபராதமும், 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.