(எம்.எப்.எம்.பஸீர்)

வெள்ளவத்தை - மற்றும் தெஹிவளை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அடிக்கடி பதிவாகும் ரயில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களை  தடுக்க வெள்ளவத்தை பொலிஸார் விஷேட திட்டங்களை  அமுல் படுத்தத்  தீர்மானித்துள்ளனர்.  

மேல் மாகாணத்தின் தென் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித பனாமல்தெனிய, உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டி சொய்ஸா ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில விஜேமான்ன இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

அதன்படி அவதானக் குறைவு காரணமாக இடம்பெறும் விபத்துக்கள் உயிரிழப்புக்களைக் கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளவத்தை முதல் தெஹிவளை வரையிலான தண்டவாளத்தின் இரு பக்கங்களிலும் வலைகளைக் கொண்டு தடுப்பு வேலி அமைக்க பொலிஸாரினால் யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.  முழுமையாக  வலைகளைக் கொண்டு மறைக்கும் விதமாக தடுப்பு வேலிகளை அமைக்க போக்கு வரத்து அமைச்சின் செயலாளருக்கு பொலிஸார் ஊடாக கோரிக்கை அனுப்பட்டுள்ளது.

போக்கு வரத்து அமைச்சின் செயலாளருக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்று வெள்ளவத்தை பொலிஸாரினால் அனுப்பட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளை போக்கு வரத்து அமைச்சு முன்னெடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெள்ளவத்தை கடல் மற்றும் கரையோர பிரதான வீதி அகிய இரண்டுக்கும் மத்தியில் கரையோர ரயில் மார்க்கம் அமைந்துள்ள நிலையில், காலை மற்றும் மாலை வேளையில் வாகன சப்தம், கடல் அலைகளின் ஓசைகளுக்கு இடையே ரயில் தொடர்பிலான கவனம் குறைவதாகவும் அதனாலேயே பெருமளவான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த  நிலையிலேயே இந்த திட்டம் தொடர்பில் பொலிஸாரினால் போக்கு வரத்து அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.