இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் கருத்து கந்தசாமி நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், தயாராகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சித்தார்த், பொபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், வித்யூத் ஜாம்ப்வால், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் நடிகர்களின் பட்டியலில் லேட்டஸ்டாக நகைச்சுவை நடிகர் விவேக் இணைந்திருக்கிறார். 

இதுகுறித்து விவேக் தன்னுடைய டுவிட்டரில், ‘நிகழும் வரை சொப்பனம். நிகழும் போதும் பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சாருக்கு என் அன்பு, ஷங்கர் சாருக்கு என் நன்றி. லைகாவுக்கு என் வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் விவேக்கை இந்த பதிவை வழக்கமான பதிவாக கடந்து போக கமல் ரசிகர்களால் முடியவில்லை. ஏனெனில் விவேக் கதையின் நாயகனாக நடித்த ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தின் தோல்விக்கு. அந்த தருணத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘பாபநாசம்’ படத்தின் வெளியீடு தான் காரணம் என பல திரைப்பட விழாக்களில் விவேக் கூறியிருந்தார். இதனால் கமல்ஹாசனின் ரசிகர்கள் விவேக்கிற்கு இணையத்தில் கண்டனம் கூட தெரிவித்திருந்தார்கள். ஆனால் அதே விவேக், கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். 

இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் தயாராகும் இந்தியன் 2 படத்தில் இயக்குனரின் சென்டிமென்ட் காரணமாகவே விவேக் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்கிறார்கள் திரையுலகினர்.

இதனிடையே இந்த ஆண்டு விவேக் நடித்த விஸ்வாசம், வெள்ளைப் பூக்கள் ஆகிய இரண்டு படங்களும் வசூலில் பெரிய வெற்றியைப் பெற்றதும், தற்போது அவர் தளபதி விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.