(இராஜதுரை ஹஷான்)

ஜனநாயக தேசிய முன்னணி கைச்சாத்திடப்பட்டதுடன்  சபாநாயகர் கரு ஜயசூரிய பதவி விலகி ஐக்கிய தேசிய கட்சின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார்.எமது  ஆருடம் தவறு என்று சபாநாயகரால் ஒருபோதும் மறுக்க முடியாது.

தனக்கு  ஏற்றாட்போல் செயற்படுவார் என்பதற்காகவே பிரதமர் சபாநாயகரை ஆதரிக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின்  தலைமை காரியாலயத்தில் இன்று  புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மக்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதி வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ஒருபோதும் களமிறக்க மாட்டார்.  கட்சியின் தலைமைத்துவத்தினை எந்நிலையிலும் பிறிதொருவருக்கு விட்டுக் கொடுக்கவும் விட்டுக் கொடுக்கவும் மாட்டார். யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற  போட்டித்தன்மையே ஐக்கிய தேசிய கட்சியினை  பிளவுப்படுத்தும். 

பொதுஜன பெரமுன,  மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்  தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஆளும் தரப்பில் எவ்வித  நெருக்கடிகளும் இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு   முரண்பாடுகள் மூடி மறைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டு  மக்கள் எதிர்பார்க்கும்  வேட்பாளருக்கு ஐக்கிய தேசிய கட்சியின்  தலைமைத்துவம் ஒருபோதும் முக்கியத்துவம் வழங்காது.

ஜனநாயக தேசிய முன்னணி  கைச்சாத்திட முன்னர்   ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என்று  ஒரு   தரப்பினரும், கூட்டணி கைச்சாத்திட்ட பின்னர் ஜனாதிபதி  வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என்று  பிறிதொரு தரப்பினரும் முரண்பட்டுக்  கொள்ளதால் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது இழுபறி நிலையில் உள்ளது.

ஆளும்  தரப்பின் ஜனாதிபதி வேட்பாளராக  களமிறங்க  சபாநாயகர் கருஜயசூரிய தயாராகவே உள்ளார். ஜனநாயக தேசிய முன்னணி  கைச்சாத்திடப்பட்டதுடன் சபாநாயகர் கருஜயசூரிய பதவி துறந்து ஜனாதிபதி வேட்பாளராக நிச்சயம் களமிறங்குவார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியை  விட்டுக் கொடுக்கமாட்டார். இதற்காக இந்த தீர்வையே இறுதியில் முன்னெடுப்பார் என்பதை உறுதியாக  குறிப்பிட முடியும் என்றார்.