(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க ஜனாதிபதிக்கு இன்னமும் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது அறிந்துகொள்ள முடிகின்றது.

 அதேபோல் தெரிவுக்குழு  கால எல்லையை நீட்டித்தமை அறிக்கையின்  இறுதி பரிந்துரைகளை காலதாமதப்படுதவா என்ற சந்தேகம் உள்ளதாகவும் ஜே.வி.பயின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று விசேட கேள்வி ஒன்றினை எழுப்பிய பிமல் ரத்நாயக எம்.பி கூறுகையில், 

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவிக்குழுவின் செயற்பாட்டு காலத்தை நீட்டிப்பது குறித்து பாராளுமன்ற அனுமதி கோரப்பட்டுள்ளது. 

காலத்தை நீட்டிப்பதில் எந்த பிரச்சினையும் எம்மத்தியில் இல்லை. அதேபோல் பலர் இதுவரை விசாரணகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 

ஆனால் வரவழைக்க வேண்டிய பிரதான நபரான ஜனாதிபதிக்கு அழைப்பு விடுப்பதாக கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஜனாதிபதிக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதா? ஜனாதிபதிக்கு இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்றே அறிய முடிகின்றது. ஆகவே தெரிவுக்குழு ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளதா? இல்லையென்றால் ஏன் இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை? தெரிவுக்குழுவின் காலத்தை நீட்டிப்பது அறிக்கையை தாமதப்படுத்தும் நோக்கத்திலா என்ற சந்தேகம் எம்மத்தியில் உள்ளது என சபையில் கேள்வி எழுப்பினார்.