(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின்  கொள்கைகளை உள்ளடக்கி ஒருமித்த  கட்சி யாப்பு உருவாக்கப்பட்டதை தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதலாம் வாரத்தில்   பலமான கூட்டணி  உருவாக்கப்படும்.  அனைத்து கட்சிகளின் உள்ளக கொள்கைகனை முன்னிலைப்படுத்தியே கட்சி யாப்பு தோற்றம்  பெறும் என லங்கா சமசமாஜ கட்சியின்  தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் பங்காளி  கட்சிகளின்  தலைவர்களுக்கும்,  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்கிழமை இரவு  விஜயராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது .  

இச்சந்திப்பு தொடர்பில் வினவிய போது அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின்   அங்கத்துவம்   செலுத்தும் கட்சி தலைவர்களின் கூட்டம்  பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதி வேட்பாளர்  கோத்தபய ராஜபக்ஷவின்  பங்குப்பற்றலுடன்  இடம் பெற்றது.  அனைத்து கட்சிகளின்  பரிந்துரைகளுக்கு அமையவே   முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ எதிரணியின் ஜனாதிபதி  வேட்பாளராக    எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால்   அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுதவற்கான வியூகங்களை வகுப்பதே தற்போதைய  தேவையாக அமைந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் குறித்த கூட்டணியை    பலமாக கட்டியெழுப்புவது தொடர்பில் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்ட கட்சிகளின் பரிந்துரைகளும், புதிய கட்சி  யாப்பு உருவாக்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டன. ஒரு சில   விடயங்களுக்கு மாத்திரமே இதுவரையில்  தீர்வு எட்டப்படவில்லை.  அவற்றிற்கு தீர்வு பெறுவது தொடர்பில்  தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது. 

ஒவ்வொரு கட்சிகளினதும் உள்ளக கொள்கைகளை  முன்னிலைப்படுத்தியே   அனைத்து தரப்பினரும் திருப்தியடையும்  வகையில்  கூட்டணிக்கான  யாப்பு  உருவாக்கப்பட்டதை தொடர்ந்து  செப்டெம்பர் மாதம் முதலாம் வாரத்தில் கூட்டணி அமைக்கப்படும் தீர்மானிக்கப்பட்டது.