(எம்.மனோசித்ரா)

இலங்கை பிரஜையாக இல்லாத போது 2005 ஜனாதிபதித் தேர்தலில் கோதாபய ராஜபக்ஷ வாக்காளராக பதிவு செய்யப்பட்டு ஜனாதிபதித் தேர்தலிலும் வாக்களித்தமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி சுயாதீனமான விசாணை வேண்டும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

சிங்கள ஊடகமொன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நந்தசேன கோதாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜையாக இல்லாத போது வாக்காளராக பதிவு செய்யப்பட்டு 2005 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தார் என்று குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த சிங்கள ஊடகம் தேர்தல்கள் ஆணையகம் இது தொடர்பாக சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. 

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து முறையான பக்கச்சார்பற்ற விசாரணையை தேர்தல்கள் ஆணையகம் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கோரிக்கை முன்வைக்கிறது.