(எம்.மனோசித்ரா)

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு சர்வதேசம் அதிருப்தி தெரிவித்துள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, எம் நாட்டு உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கு சர்வதேசத்திற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தமை தொடர்பில் அமெரிக்க , ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என சர்வதேச ரீதியில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

நிறைவேற்றதிகாரத்திற்கேற்ப இராணுவ தளபதியை நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காணப்படுகின்றது. இராணுவத் தளபதியை மாத்திரமின்றி சகல அரச நியமனங்களிலும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது. எனவே அரசியலமைப்பிற்கேற்ப தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்ததில் எவ்வித தவறும் கிடையாது. 

சவேந்திர சில்வாவுக்கு எதிராக கொலை, காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட யுத்த குற்றங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு அவருக்கு எதிராக யுத்த குற்றங்கள் காணப்படுமானால் அவை தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படுவதோடு, அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கலாம் என அவர் இதன்போது தெரிவித்தார்.