(எம்.எப்.எம்.பஸீர்)

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் புத்தளம் தில்லையடியில் உள்ள வீடு இன்று விஷேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.  எப்.சி.ஐ.டி. எனப்படும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எஸ்.ரி.எப். எனப்படும்  அதிரடிப் படையினரின்  உதவியுடன் இந்த சோதனையை நடத்தினர்.

21/4 தொடர் தற்கொலை தாக்குதல்களையுடுத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது  பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.  இந் நிலையில் அமைச்சர் ரிஷாட், முன்னாள் ஆளுநர்களான  ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடுகளை ஏற்க பொலிஸ் தலைமையகத்தில் விஷேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்ப்ட்டது.

 அந்த குழுவுக்கு  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க செய்த முறைப்பாட்டின் மீதான விசாரணைகளின் ஒரு அங்கமாக  இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப்ட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். 

இதன்போது அந்த வீட்டில் இருந்து எந்த சந்தேகத்துக்கிடமான  பொருட்களும் சிக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.