(நா.தனுஜா)

இராணுவத் தளபதியின் நியமனம் அரச தலைவரின் இறையாண்மைக்கு உட்பட்ட தீர்மானமாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் வெளிவிவகார அமைச்சு, நாட்டின் பதவியுயர்வு தொடர்பான தீர்மானங்களைப் பாதிக்கும் வகையிலான வெளிநாட்டு தரப்பினரின் முயற்சிகள் தேவையற்றவையும், ஏற்றுக்கொள்ள முடியாதவையுமாகும் என்றும் தெரிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து உள்நாட்டு, சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகள் கடும் கண்டங்களை வெளியிட்டிருந்தன. இந்நிலையில் அதுகுறித்து வெளிவிவகார அமைச்சு இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை இராணுவத் தளபதியின் நியமனம் அரச தலைவரின் இறையாண்மைக்கு உட்பட்ட தீர்மானமாகும். அதேவேளை நாட்டின் பொதுச்சேவை, பதவியுயர்வு தொடர்பான தீர்மானங்கள் மற்றும் உள்நாட்டு நிர்வாக செயன்முறைகளைப் பாதிக்கும் வகையிலான வெளிநாட்டு தரப்பினரின் முயற்சிகள் தேவையற்றவையும், ஏற்றுக்கொள்ள முடியாதவையுமாகும்.

மேலும் சவேந்திர சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு அவரது நியமனம் தொடர்பில் விசனம் தெரிவித்துக் கருத்துக்களை வெளியிடுவது கவலையளிக்கிறது. அத்தோடு அது சர்வதேசத்தின் சகல பொறுப்பு வாய்ந்த தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் இயற்கை நீதி கொள்கைகளுக்கு முரணானதுமாகும்.