(நா.தனுஜா)

சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய அதேவேளை, மனித உரிமை மீறல் குற்றங்கள் புறக்கணிக்கப்படுதல் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தல் போன்றவை மேலும் நடைபெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களினால் எடுக்கப்பட வேண்டும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியிருக்கிறது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தீர்மானம் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

அறிக்கையில் முழுமையான விபரம் வருமாறு:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து நாங்கள் அவதானம் செலுத்தியிருக்கும் அதேவேளை, சவேந்திர சில்வாவிற்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் பின்னணியில் இந்நியமனம் தொடர்பில் உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 

இவ்வருடம் ஜனவரி மாதத்தில் சவேந்திர சில்வா இராணுவத்தின் அலுவலகப் பிரதானியாக நியமிக்கப்பட்ட வேளையிலும் நாங்கள் இதனையொத்த கருத்தையே வெளியிட்டிருந்தோம். பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் என்பன குறித்து வாக்களித்த தற்போதைய அரசாங்கம், அவற்றை நிறைவேற்றுவதற்கு எவ்வித நடவடிக்கைகயையும் மேற்கொள்ளாமை கவலையளிக்கிறது. மனித உரிமைகளுக்குச் செய்யப்படும் அவமரியாதையையும், தண்டனைகளில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புக்களையுமே இந்நியமனம் வெளிக்காட்டி நிற்கிறது.

இந்நிலையில்  சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை சவேந்திர சில்வா மற்றும் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்குமாறு பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவிடம் வலியுறுத்துவதுடன், மனித உரிமை மீறல்கள் புறக்கணிக்கப்படுதல் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தல் போன்றவை மேலும் நடைபெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.