நெஞ்சம் நிமிர்த்து என்ற படத்தின் மூலம் புதுமுக நடிகர் மோகன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். 

ஜெ. ஆர். பிலிம் இண்டர்நேஷனல்என்ற படநிறுவனம் சார்பில் தயாராகும் புதிய திரைப்படம் ‘நெஞ்சம் நிமிர்த்து.’ இந்த படத்தில் புதுமுக நடிகர் மோகன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் சாம் இம்மானுவேல்.

நெஞ்சம் நிமிர்த்து என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகர்  மோகன் எம்முடைய மண்ணைச் சார்ந்தவர். அதிலும் முல்லைத்தீவுப் பகுதியைச் சேர்ந்த கபடி விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தைப் பற்றி அறிமுக நடிகர் மோகன் பேசுகையில்,“இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியப் பிரச்சினையாக, விஸ்வரூபமெடுத்திருக்கும், இந்திய அளவிலான சமூகபிரச்சினை ஒன்றை கதையின் நாயகன் கையில் எடுக்கிறான். அந்த பிரச்சினையை நாயகன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை பரபரப்பான எக்சன் திரில்லராக உருவாகியிருக்கிறது. காதல், சென்ட்டிமெண்ட், கொமடி என கொமர்ஷல் அம்சங்களுடன் தயாராகிறது.  மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும், பாடல் காட்சிகள் மலேசியாவிலும் என ஐம்பது நாள் படபிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.” என்றார். 

இதன் தொடக்கவிழா அண்மையில் சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இந்த படத்தில் நாயகனுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இயக்குநர் சாம் இம்மானுவேல் தெரிவித்தார். 

எம்மண்ணில் பிறந்து ‘நெஞ்சம் நிமர்த்து’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவிருக்கும் கபடி விளையாட்டு வீரரான மோகன், முன்னணி நட்சத்திரமாக வளர வாழ்த்துவோம்.