(செ.தேன்மொழி)

சதொச நிறுவனத்தின் ஊடான அரிசி விற்பணையின் போது 4 மில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒரு வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொது முகாமையாளர் விமல் பொரேராவை 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

ஒரு வருட சிறைத்தண்டனையுடன் 50 ஆயிரம் ரூபாய் தண்டபணம் செலுத்துமாறும் நீதவான் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறிப்பிட்டிருந்தார்.

 இந்நிலையில் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்வதாக பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் தெரிவித்த நிலையிலேயே மூன்று இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுக்க உத்தரவிட்டார். 

அதேவேளை வழக்கின் பிரதிவாதியான சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் முகாமையாளர் விமல் பெரேராவின் சேவை காலத்தின் போது , சதொச நிறுவனத்தின் ஆயிரம் மெக்ரிக் டொன் தொகை அரிசியை அதன் விலை பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த விலையையும் விட குறைந்த விலையில் , விநியோகித்து 4 மில்லியன் ரூபாய் அரச பணத் தொகையில் நட்டம் ஏற்படுத்தியதாக குறிப்பிட்டு , இலஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.