(நா.தனுஜா)

சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடுகின்ற அமெரிக்கா, பல வருடங்களுக்கு முன்னர் பிளவடையும் நிலையேற்பட்டது. அப்போது யுலிசிஸ்.எஸ்.கிரான்ட் என்ற இராணுவத் தளபதியே போரினூடாக ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கினார்.

 அப்போது அவர் மீதும் போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டன. எனவே அமெரிக்காவிற்கு யுலிசிஸ் கிரான்ட் முக்கியம் என்பதைப் போல நாட்டிற்காகக் போர் புரிந்த சவேந்திர சில்வா எமக்கு முக்கியம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்தார்.

பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விக்கு விளக்கமளித்த அவர்,

இராணுவத்தளபதியை நியமிக்கும் அதிகாரம் முப்படைகளின் பிரதானியான ஜனாதிபதிக்கு உண்டு. எனவே அதுகுறித்து கருத்துக்கூற முடியாது. ஆனால் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் அமெரிக்காவின் கருத்து தொடர்பில் கூறுவதாயின்,

ஒன்றை நினைவு படுத்த விரும்புகின்றேன். ஆபிரகாம்லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் அமெரிக்கா இரண்டாகப் பிளவுபடும் நிலையேற்பட்டது. அதன்போது ஆபிரகாம் லிங்கனின் வட படையணிக்குத் தலைமை தாங்கிச் சென்ற இராணுவ வீரரான யுலிசிஸ்.எஸ்.கிரான்ட் தெற்குப் படையைத் தோற்கடித்து, அமெரிக்காவை ஐக்கியப்படுத்தினார். 

அப்போது யுலிசிஸ் கிரான்ட் மீதும் போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அன்று கிரான்ட் அப்போரில் பங்கேற்று, வெற்றியடைந்திருக்காவிட்டால் இன்றைய வல்லாதிக்கம் பொருந்திய ஐக்கிய அமெரிக்கா இருந்திருக்காது.

அதேபோன்று தான் சவேந்திர சில்வாவும் தனது தாய், தந்தையைக் காப்பாற்றுவதற்காக யுத்தத்திற்குச் செல்லவில்லை. மாறாக நாட்டிற்காகவே சென்றார். குற்றங்கள் ஏதேனும் இருப்பின் அதனை முறைப்படி விசாரணை செய்வதற்கு நீதித்துறை உண்டு. 

எமது நாட்டின் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்படுவதைக் கடந்த காலங்களில் நிரூபித்திருக்கின்றோம். எனவே அமெரிக்காவிற்கு யுலிசிஸ்.எஸ்.கிரான்ட் எவ்வாறு முக்கியமோ, அதேபோன்று எமக்கு சவேந்திர சில்வா முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.