விஜய் மல்லையாவுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் அனுப்பும்படி சர்வதேச பொலிஸான இன்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா அதை திருப்பிச் செலுத்தவில்லை. இதில் 1000 கோடி ரூபாய் வரை அவர் வெளிநாட்டில், தனக்கு சொந்தமான கிங்பிஷர் விமான நிறுவனத்தில் முதலீடு செய்ததாக சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

அமலாக்கத்துறை தொடர்ந்த குறித்த வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையாவை கைது செய்து, பிணையில் வெளி வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. 

இதற்கிடையே விஜய் மல்லையா கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி இங்கிலாந்து சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்கு திரும்பி நீதிமன்ற வழக்குகளை சந்திக்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

அவர் மறுத்ததால், அவருடைய சிறப்பு கடவுச்சீட்டை மத்திய அரசு முடக்கியதுடன் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்தை கேட்டுக் கொண்டது. இதைத்தொடர்ந்து தனது எம்.பி. பதவியை அவர் இராஜினாமா செய்தார்.

விசாரணைக்காக விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதை இங்கிலாந்து நிராகரித்தது. இந்த தகவலை இந்திய அரசுக்கும் இங்கிலாந்து அரசு தெரிவித்து இருக்கிறது.

இதையடுத்து, சர்வதேச பொலிஸ் உதவியுடன் விஜய் மல்லையாவை கைது செய்து கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மல்லையாவுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் அனுப்பும்படி சர்வதேச பொலிஸான இன்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

நீதித்துறை தேடும் ஒரு நபர் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு அவரை கைது செய்வது தொடர்பான நடவடிக்கை சிவப்பு அறிவித்தல் ஆகும்.