பூமியின் துணைக்கோளான நிலவில் குடியேற பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதையொட்டி அதன் நிலப்பரப்பில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் சந்திரயான் வெற்றியைத் தொடர்ந்து, சந்திரயான் 2 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. 

இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.எவி மார்க் 3 ரொக்கெட் மூலம், கடந்த மாதம் 22 ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.

அடுத்த 16 நிமிடங்களில் செயற்கைக்கோள் பூமியின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து பூமியை சுற்றி வரும் வட்டப்பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. 

இதன் தொடர்ச்சியாக கடந்த 14 ஆம் திகதி, நிலவை நோக்கி சந்திரயான் - 2 தனது பயணத்தை தொடங்கியது. ஏற்கனவே திட்டமிட்டபடி, சந்திரயான் 2 விண்கலத்தை இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையில் இணைக்க முயற்சி எடுக்கப்பட்டது. 

அதன்படி, இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு மணி நேரம் செயற்கைக்கோளின் திரவ எஞ்சின் இயக்கப்பட்டது. இதன்மூலம் நிலவை நோக்கி செயற்கைக்கோள் சீறிப் பாய்ந்தது. திட்டமிட்டபடி, நிலவை சுற்று வட்டப்பாதையில் சந்திரயான் 2 இணைந்தது. 

தற்போது வெற்றிகரமாக நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான் 2 விண்கலம் சுற்றி வருகிறது. இதனை தீவிரமாக கண்காணித்து வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள், செயற்கைக்கோளின் வெற்றிகரமான நகர்வை கொண்டாடி மகிழ்ந்தனர். 

பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 28 நாட்களுக்கு பிறகு, தற்போது நிலவின் நீள்வட்டப் பாதையை செயற்கைக்கோள் அடைந்துள்ளது. வரும் செப்டம்பர் 2ஆம் திகதி, சந்திரயான் 2-ல் உள்ள விக்ரம் லேண்டர் பிரிந்து செல்லும். 

அது நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருமுறை மாற்றியமைக்கப்படும். அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். இதையடுத்து செப்டம்பர் 7ஆம் திகதி நிலவில் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.