குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்ணொருவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (19) உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் சம்பூர்- சந்தோஷபுரம்- கடற்கரை சேனை பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி செம்பாத்தை ( 60 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

திருகோணமலை- சந்தோஷபுரம் பகுதியில் இரண்டு பேர் ஆடு மேய்ப்பதற்காக காட்டுப் பகுதிக்கு சென்று ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த வேளை மரம் ஒன்றில் இருந்த குளவிக் கூடு கலைந்து ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த போது  இரண்டு பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்நிலையில் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் தற்பொழுது மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கான அதே இடத்தைச் சேர்ந்த வீர குட்டி நாகேந்திரம் (48 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மூதூர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. ஜே. எம். நூருல்லா மரண விசாரணைகளை மேற்கொண்டு இப்பெண்ணுக்கு  குளவி கொட்டியமை   உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.