(ஆர்.விதுஷா)

ஹெரோயின்  போதைப்பொருளுடன்  கடந்த  13  ஆம் திகதி  கைது  செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில்  ஒருவர்  அம்பலாங்கொட  பகுதியில் வெலிகடை சிறைச்சாலை பயிற்சிப்பாடசாலையின்  அதிகாரி கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியுள்ளமை  விசாரணைகளின்  போது தெரிய வந்துள்ளதாக அம்பலாங்கொட  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 

சந்தேக நபர்கள்  இருவரும் 2 கிராம்  790 மில்லிகிராம் ஹெரோயின்  போதைப்பொருளுடன்  அம்பலாங்கொட  பொலிசாரினால் கைது  செய்யப்பட்டிருந்தனர்.  

அவர்களை நீதிமன்ற அனுமதியுடன் 7 நாள்  தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்திய நிலையிலேயே  இந்த விடயம்  தெரிய வந்துள்ளது.  

சந்தேக நபரான  ஹிக்கடுவ  பகுதியை  சேர்ந்த   27 வயதுடைய  நபரே கொலை  சம்பவத்திற்கு  உதவி  ஒத்தாசை  வழங்கியுள்ளமை  தெரிய வந்துள்ளது.குறித்த   சந்தேக  நபர்   முன்னாள்  கடற்படை  வீரர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.  மற்றைய  சந்தேக நபர்   ஹோட்டலொன்றின்  மேற்பார்வையாளராக  கடமையாற்றியுள்ளார்.   

இந்நிலையில் கொலை சம்பவத்துடன்  தொடர்புடைய   சந்தேக நபரிடத்தில்  மேற்கொள்ளப்பட்ட  மேலதிகசாரணைகளுக்கு  அமைய   அவர்  வசித்து வந்த வீட்டிலிருந்து  ரீ - 56  ரக துப்பாக்கிக்கு  பயன்படுத்தப்படும்  63  துப்பாக்கி  ரவைகள்  கைப்பற்றப்பட்டுள்ளன.  இதேவேளை  15  சிம்  அட்டைகளும்  மீட்கப்பட்டுள்ளன.  

சந்தேகநபர்கள்  இருவரும்  ஹெரோயின் போதைப்பொருளை  தம்வசம்  வைத்தியருந்தமை  தொடர்பிலான  குற்றச்சாட்டின்  பேரிலேயே  கைது  செய்யப்பட்டிருந்தனர்.  

ஆகவே ,  இன்று சந்தேக நபர்கள்  இருவரும்  பலப்பிட்டிய  நீதவான்  நீதிமன்றத்தில்  ஆஜர்ப்படுத்தப்பட்டவிருந்த நிலையில்  , சந்தேக நபர்களில்  ஒருவர்  கொலை சம்பவத்துடன்   தொடர்புப்பட்டுள்ளமை தொடர்பில்  நீதிமன்றத்திற்கு  தெரியப்படுத்தவுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.  

அத்தோடு இச் சம்பம் தொடர்பில் அம்பலாங்கொட  பொலிசார்  மேலதிக  விசாரணைகளை  மேற்கொண்டு  வருகின்றனர்.