ஹொங்கொங்கின் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் அவற்றின் பத்தாவது வாரத்திற்குள் பிரவேசித்திருக்கின்றன. அமைதியான தீர்வொன்றுக்கான அறிகுறியைக் காணமுடியவில்லை என்பது கவலைக்குரியதாகும். ஹொங்கொங்கில் இருந்து சந்தேகநபர்களைச் சீனாவுக்கு நாடுகடத்துவதை அனுமதிக்கும் உத்தேச  சட்டம் ஒன்றே முதலில் ஆவேசமான ஆர்ப்பாட்டங்களை மூளவைத்தது.சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை இடைநிறுத்துவதாக ஹொங்கொங்கின் பிரதம நிறைவேற்று தலைவர் காறீ லாம் அறிவித்தபோது ஜூலை மாதத்தின் முற்பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களின் ஆரம்ப வெற்றியை சாதித்துவிட்டார்கள். 

ஆனால், ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன ; அந்த சட்டமூலத்தை முற்றாக வாபஸ் பெறவேண்டும் ; ஆர்ப்பாட்டக்காரர்களை கலகக்காரர்கள் என்று நோக்குவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும் ; பொலிசாரின் வன்செயல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்படவேண்டும் ; கைதுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மன்னிப்பு அளிக்கவேண்டும் ; சர்வஜனவாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்பன உட்பட ஆர்ப்பாட்டக்காரர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.இது கூடுதல் ஜனநாயகத்துக்கான ஒரு இயக்கமாக மாறிவிட்டது.நகரைச் சுற்றி " நகரும் ஆக்கிரமிப்பு " போன்ற நிலையுறுதியற்ற போராட்ட வடிவங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டம் காட்டத்தொடங்கினார்கள்.அவர்கள் ஹொங்கொங்கின் சட்டசபையை முற்றுகையிட்டார்கள் ; நகரின் சர்வதேச விமானநிலையத்தை மூடுமளவுக்குச் சென்றார்கள்.

நாடுகடத்தல் சட்டமூலத்தை இடைநிறுத்தியதற்குப் பிறகு ஹொங்கொங் அரசாங்கம் வேறு விட்டுக்கொடுப்பு எதையும் செய்யாமல் உறுதியாக நின்றது.பெய்ஜிங்கின் தூண்டுதலில் அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கு படைபலத்தையும் கடுமையாகப் பிரயோகித்தது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் ஹொங்கொங் அரசாங்கத்தின் விசுவாசிகளும் சீன ஆதரவுச் சக்திகளும் ஊடுருவிவிட்டாரகள் என்பது தெளிவாகத் தெரியவந்தது.பெருமளவுக்கு அமைதியான போராட்டமாக முன்னெடுக்ப்பட்டுவந்த ஆர்ப்பாட்டங்களை குழப்பியடிப்பதே இந்த ஊடுருவல்களின் நோக்கமாகும். 

ஆர்ப்பாட்டக்காரர்களின் மத்தியில் இருந்துகொண்டே ஊடுருவல்காரர்கள் அவர்களைத் தாக்கினார்கள் ; பொலிசாரின் மூர்க்கத்தனத்தை நியாயப்படுத்துவதற்காக ஊடுருவல்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள். ஆர்ப்பாட்டங்களின் ஆரம்ப வாரங்களில் ஹொங்கொங்கில் கட்டவிழ்ந்த நிகழ்வுகள் தொடர்பில் மௌனமாக இருந்த சீன ஊடகங்கள் இப்போது ஆர்ப்பாட்டங்களுக்கு விரோதமான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன -- ஆர்ப்பாட்டக்காரர்களை அந்த ஊடகங்கள் ' வன்முறைக் கும்பல் ' என்றும் ' கிறிமினல்கள் ' என்றும் வர்ணிக்கின்றன.ஆர்ப்பாட்டங்கள் பயங்கரவாத அறிகுறிகளைக் காண்பிக்கின்றன என்று ஹொங்கொங் விவகாரங்களுக்கு பொறுப்பான சீன உயர் அமைப்பு கூறியிருக்கிறது.ஆர்ப்பாட்டக்காரர்களை கொடூரமானமுறையில் அடக்கியொடுக்குவதற்கான தயாரிப்பு வேலைகளில் சீன அரசாங்கமும்  ஹொங்கொங் அரசாங்கமும் ஈடுபட்டிருக்கின்றன என்பது தெளிவானது.

ஹொங்கொங்குடனான சீனாவின் எல்லையோரமாக சீன பரா இராணுவப்படைகளும் இராணுவ வாகனங்களும் பெருமளவில்  குவிக்கப்படுவதை செய்மதி மூலமான படங்கள் காட்டுகின்றன. போராட்டத்தை கைவிடுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களை  நிர்ப்பந்திக்கும் ஒரு தந்திரோபாயமாக படைபலத்தைக் காட்டி அச்சுறுத்தும் ஒரு செயலாக இந்த படைக்குவிப்பு இருக்கக்கூடும் என்கிற அதேவேளை, அவர்களை நசுக்குவதற்கு ஹொங்கொங்கிற்குள் சீனா படைகளை அனுப்பக்கூடிய சாத்தியத்தையும் நிராகரிப்பதற்கில்லை. அத்தகைய நடவடிக்கையினால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.மனித இழப்புகளே மிகுதியாக இருக்கும்.

30 வருடங்களுக்கு முன்னர் பெய்ஜிங்கின் தியனென்மென் சதுக்கத்தில் கட்டவிழ்த்துவிட்ப்பட்ட பயங்கரத்தை மீண்டும் ஹொங்கொங்கில் நிகழ்த்தினால் அது சீனாவின் உலகளாவிய செல்வாக்கிற்கு பாரிய சேதமாக மாத்திரமே அமையும்.வளர்ந்துவரும் ஒரு வல்லரசு என்ற வகையில், சீனா இந்த நெருக்கடியில் நிதானமாகவும் விவேகமாகவும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்ளவேண்டும்.அடக்கியொடுக்கும் நடவடிக்கைகளின் மூலமாக ஆர்ப்பாட்டக்காரர்களை வீதிகளில் இருந்து அப்புறப்படுத்த முடியும் என்றாலும், அது ஹொங்கொங்கில் சுதந்திர ஆதரவு இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்துவதாக மாத்திரமே அமையும்.என்ன விலை கொடுத்தேனும் ஹொங்கொங் வீதிகளில் வன்முறைகளை தவர்ப்பதற்கு சீனா முயற்சிப்பதே நல்லது.

( டெக்கான் ஹெரால்ட்)