(நா.தினுஷா)

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியை அமைக்கும் விவகாரம் இன்னும் கலந்துரையாடல் மட்டத்திலேயே உள்ளது. உத்தேச யாப்புக்கான சகல திருத்தங்களும் முழுமை செய்யப்பட்டுள்ளன. இந்த யாப்பு திருத்தங்களுக்கு சகல பாராளுமன்ற உறுப்பினர்களதும்  ஆதரவைப் பெற்றுக்கொண்டு விரைவில் புதிய ஜனநாயக முன்னணியை அறிவிப்போம்  என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.  

இன்று  அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கூட்டணி தொடர்பில் விளக்கமளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் மேலும் கூறியதாவது ; 

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும். அதற்கான பேச்சுவாரத்தைகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. மிகவிரைவில் அதற்கான பேச்சுவாரத்தைகள் நிறைவுக்கு வரும் என்ற எதிர்பார்க்கிறோம். 

ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வது தொடர்பான விடயங்களும் இன்னும் கலந்துரையாடல் மட்டத்திலேயே உள்ளன. 

ஜனாதிபதி வேட்பாளரை தற்போது  அறிவிப்பதற்கான எந்த அவசியமும் கிடையாது. வேட்பாளரை இறுதியாகவே அறிவிக்க வேண்டும். தேர்தலுக்கு ஒரு மாதம்  இருக்கும்போது சிறந்த வேட்பாளர் ஒருவரை களமிறக்கினால் எம்மால் சிறந்த வெற்றியை பெற்றுக்கொள்ள முடியும். அதேபோன்று எங்களின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியிலில் பலர்; இருக்கிறார்கள். வேட்பாளரை தெரிவு செய்வதில் அதுவே எங்களின் பிரச்சினையாகவும் உள்ளது.  

கூட்டணி அமைப்பதில் இருந்த அனேகமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் வெற்றிகரமாக நிறைவடைந்திருந்தது. கூட்டணியின் செயலாளர்,  கூட்டணியின் பிரதான காரியாலயம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்தன. 

இப்போது கூட்டணிக்கான யாப்பு திருத்தங்கள் முழுமையடைந்துள்ளன. திருத்தங்களுடனான உத்தேச முன்னணிக்கான யாப்பினை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.