கார்த்தி நடித்த ‘கைதி’ படம் செப்டம்பர் 27 ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘தேவ்’ படத்தின் தோல்விக்கு பிறகு ‘மாநகரம்’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘கைதி ’படத்தில் கார்த்தி நடிக்கிறார். இந்த படத்தில் கார்த்தியுடன் நரேன்  ஜோர்ஜ் மாயன், ரமணா, ‘தலைவாசல்’ விஜய், பொன்வண்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி எஸ் இசையமைக்கிறார். பிலோமின் ராஜ் படத்தை தொகுக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் கார்த்திக்கு ஜோடி இல்லை. ஆனால் படம் சஸ்பென்ஸ், எக்சன் திரில்லர் என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்ட நிலையில் அடுத்த மாதம் 27 ஆம் திகதியன்று இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்பு கொண்டபோது,“ ‘தளபதி 64’ படத்தின் பணிகள் ஒக்டோபர் 3 ஆம் திகதியன்று தொடங்கவிருப்பதால், தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு மலை வாசஸ்தலத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படத்திற்கான திரைக்கதை வசனத்தை எழுதி வருவதாகவும், விரைவில் சென்னை வந்தபிறகு விரிவாக ‘கைதி ’படத்தின் தகவல்களை பகிர்ந்து கொள்வ”தாகவும்  பதிலளித்தார்.

நடிகர் கார்த்தி தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகாவுடன் பெயரிடப்படாத படத்திலும், ‘ரெமோ ’படத்தை இயக்கிய இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில்,நடிகை ராஷ்மிகாவுடன் இணைந்து ‘சுல்தான்’ என பெயரிடப்பட்டிருக்கும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.