வடக்கு உட்பட முழு நாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் தமிழ் மக்களும் ஏனைய இன மக்களும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எமது கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். 

பருத்தித்துறையில் இன்று  திங்கட்கிழமை இடம்பெற்ற அகில இலங்கை மோட்டார் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த தினேஷ் குணவர்தன, 

நான்கரை வருடங்கள் இந்த அரசாங்கம் ஆட்சி செய்துள்ளது. தமிழ் தலைமைகளுக்கூடாக கிடைக்கும் என்று எதிர்பார்த்த எந்தவொரு உதவியும் இந்த அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. 

வடக்கில் மாற்றத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தியது எமது அரசாங்கமேயாகும். எனவே வடக்கிலும், தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி முழு நாட்டிலும் எம்மால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். 

மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே வடக்கிலுள்ள இளைஞர்கள் உள்ளிட்ட அனைவர் வாழ்வில் மாற்றத்தை காண முடியும். இந்த மாற்றத்தை எமக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் ஏற்படுத்த முடியும் என்று பொறுப்புணர்வுடன் கூறுகின்றேன். 

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.