(இராஜதுரை ஹஷான்)

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க  களமிறக்கப்பட்டுள்ளமை  எவ்விதத்திலும் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு  ஒரு  சவால் அல்ல.  எதிரணியினர் இலகுவாக வெற்றிப் பெறும் மார்க்கத்தினையே   ஜே. வி. பி. யினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்  என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி 2010, 2015ம் ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றிப் பெறுவதற்கு  மக்கள் விடுதலை முன்னணியே   பாரிய  ஒத்துழைப்பு வழங்கியது.  2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு  மக்கள் விடுதலை முன்னணியின்  பங்கு பிரதானமானது.    கடந்த நான்கு  வருட காலமாக நாட்டில் ஏற்பட்ட அரசியல்  நெருக்கடிகள் மற்றும் முறையற்ற நிர்வாகத்திற்கு     அரசாங்கத்திற்கு  பங்காளிகளாக செயற்பட்டவர்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியின்  நிர்வாகத்தின் மீது நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். மக்களின்  வெறுப்புக்களில் இருந்து மீள     இம்முறை  ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக   ஜே. வி. பி. யினர்  தனித்து களமிறங்குவதால் எவ்வித   மாற்றங்களும் ஏற்படாது.   அவர்களின் செயல் வரவேற்கத்தக்கது.    பொதுஜன பெரமுனவினர் வெற்றிப் பெறுவதற்கான வழிமுறைகளையே   காண்பிக்கப்பட்டுள்ளது என்றார்.