(செ.தேன்மொழி)

புத்தளம் - அருவக்காலு குப்பை சேர்க்கும் இடத்திற்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறிகள் மீது கல் எறிந்து தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் - மன்னார் பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை அருவக்காலு குப்பை சேர்கும் இடத்திற்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற 3 லொறிகள் மீது கல் வீசப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே குறித்த கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விரைந்து செயற்பட்ட இராணுவத்தினர் நான்கு பேரை கைதுசெய்துள்ளனர்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன. 

பின்னர் இராணுவத்தினர் சந்தேக நபர்களை  மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொழும்பிலிருந்து குப்பைகளை புத்தளம் அருவக்காலு பகுதிக்கு கொண்டு செல்வதற்கு பிரதேச வாசிகளால் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்த போதும் , பொலிஸாரின் பாதுகாப்பின் மத்தியில் குப்பைகள் தொடந்தும் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இவ்வாறு குப்பைகளை ஏற்றிச் சென்ற 3 லொறிகள் மீதே சந்தேக நபர்கள் கல்வீச்சை மேற்கொண்டுள்ளனர். இருந்த போதும் தற்போது குப்பைகளை ஏற்றிச் செல்லும் லொறிகளின் பாதுகாப்பிற்காக  இராணுவத்தினரும் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

புத்தளம் பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.