இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

ஆஷஸ் தொடரின் 2 ஆவது போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 258 ஓட்டங்களையும் அவுஸ்திரேலிய அணி 250 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.

இந்நிலையில,  8 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து தனது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்தது. 4 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பென் ஸ்டோக்ஸ் 16 ஓட்டங்களுடனும் ஜோஸ் பட்லர்  10 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம்  ஆரம்பமாகியது.

பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இங்கிலாந்து அணி 71 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்களை எடுத்திருந்தபோது 2 ஆவது இன்னிங்சை நிறுத்திக்கொண்டது. பென் ஸ்டோக்ஸ் 115 ஓட்டங்களுடனும் பேர்ஸ்டோவ் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 266 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றதால் அவுஸ்திரேலியாவுக்கு 267 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து களமிறங்கிய 267 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஆஷஸ் தொடரின் 2 ஆவது போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது. அவுஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுசாக்னே 59 ஓட்டங்களையும் ஹெட் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், ஜக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.