நுண்ணறிவில் சிறந்த விஞ்ஞானியான அல்பட்  என்ஸ்டைனின் சாதனை  இலங்கை வம்சாவளி சிறுமியான நிஷி உக்லேயால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் மென்சா நிறுவனத்தினால்  முன்னெடுக்கப்பட்ட  நுண்ணறிவுத் தேர்வில்  10 வயது சிறுமியான  நிஷி உக்கலே  கலந்துகொண்டு சாதனையை முறியடித்துள்ளார்.

குறித்த இச்சிறுமி  தனது முதலாவது தேர்வில் 162 புள்ளிகளையும் இரண்டாவது தேர்வில் 142 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

இவரின் அறிவுத்திறமையைக்கண்டு வியந்த  அவ் அமைப்பினர்  இச்சிறுமியை அவர்களின் அமைப்பில் இணைத்துக்கொண்டுள்ளனர். 

இச்சிறுமி அல்பட்  அய்ன்ஸ்டைனை விட  2  புள்ளிகள் அதிகமாக பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

நிஷி உக்லேவின் பெற்றோரான நிலங்க மற்றும் ஷிரோமி  கடந்த 2001 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து இங்கிலாந்தின் மென்சஸ்டர் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். 

நிஷியின்  தந்தையான நிலங்க , மகளின் முன்பள்ளி  ஆசிரியர்களே எல்லாவற்றிற்கும் காரணம் என புகழ்ந்துள்ளார்.

அவர் தனது மகள் குறித்து மேலு தெரிவிக்கையில்,

அவள் எங்களுக்கு கிடைத்த வரம். வெகு சீக்கிரத்திலேயே அவள் எழுத படிக்க கற்றுக்கொண்டாள் , அத்துடன் அவள் கணிதத்தில் தேர்ச்சி பெற்றுக்காணப்பட்டாள். 

நாங்களும் பல சுவாரஸ்யமான சோதனைகளை அவளுக்கு வழங்கினோம். எந்தப்பொற்றோரும் தமது  பிள்ளைகளின் திறமைகள் வீணாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் இருப்பினும் அவர்களின் குழந்தைப்பருவத்தை சரி சமமான வகையில் பேணப்பட வேண்டும்.

அவளும்   ஏனைய சிறுவர்களைப்போல் 10 வயதுச்சிறுமி . அவளுக்கு படிக்கவும் சைக்கிள் ஓட்டவும் மிகவும் பிடிக்கும்.  அவள் குறித்து நான் மிகவும் பெருமையடைகிறேன்.

கடந்த மாதம்  மென்சஸ்டரில் இடம்பெற்ற தேர்வை எழுதிய  முதல் குழந்தை  நிஷி ஆகும். முதல் தேர்வில் 150 கேள்விகளுக்கும்  விடையளித்தாள் , ஆனால் இரண்டாவது வினாத்தாளை சரியான நேரத்திற்குள் விடையளிக்க தவறிவிட்டாள்.

இது குறித்து சிறுமி நிஷி தெரிவிக்கையில்,

விடையளிப்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. அதேவேளை அவ்வளவு கடினமானதாகவும் இருக்கவில்லை . முதல் வினாத்தாள் எழுதி முடித்த பின் போதியளவு நேரம் இருந்தமையினால் விடைகளை சரி பார்க்க முடிந்தது என தெரிவித்தார்.