றுகுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட றுகுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களுக்களையுமே எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது றுகுணு பல்கலைகழகத்தின் மாணவர்களான இவர்கள் , பல்கலைக்கழகத்தின் முதல் ஆண்டு மாணவனான 22 வயதுடைய ஓருவரை , மெத்தவத்த விடுதியில் வைத்து பகிடிவதை செய்துள்ளதாக மன்றில் தெரிவித்த பொலிஸார் இவர்கள் குறித்து விசாரணைகள் தொடர்வதால், சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து  நீதிவான் சந்தேக நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவனின் வைத்திய சான்றிதழையும் எதிர்வரும் வழக்கு விசாரணைகளின் போது மன்றில் சமர்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 

இவ்வாறு பகிடிவதைக்கு உள்ளாகியதாக குறிப்பிடப்படும் மாணவன் சமூக வலைத்தலங்களின் ஊடாக காணொளியொன்றை வெளியிட்டிருந்தார். பின்னர் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய ஊடகங்கள் இந்த மாணவனை அழைத்து சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். 

ஊடகங்களில் வெளிவந்த தகவலை அடுத்து பொலிஸார் சந்தேக நபர்களான மாணவர்களை கைது செய்திருந்தனர். பின்னர் பொலிஸார் சந்தேக நபர்களை நீதிவான் நிதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது நீதிவான் நேற்று திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.