(செ.தேன்மொழி)

மஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மஹியங்கனை- பாடசாலைக்கு அருகில் ஓடும் மகாவலி கங்கையில். நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வர் நீரில் மூழ்கிவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதன்போது நீரில் மூழ்கி கொண்டிருந்த இளைஞர்களை பொலிஸாரும் , பிரதேச வாசிகளும் இணைந்து மீட்டு மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் இரு இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் அவசரப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வத்தேகம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ரத்னாயக்க முதியன்சேலாகே மாதவ பண்டார ஹேரத் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மெதகொட ஆராச்சிலாகே ஷாலிக விமுக்தி ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மஹியங்கனை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.