ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜன் - சசி தேவி தம்பதி. இவர்களின் 4 வயது மகன் ரெங்கநாதன். இவர், அதே பகுதியில் உள்ள பாடசாலையில் எல்.கே.ஜி படித்து வருகிறார்.

இந்நிலையில், பாடசாலை விடுமுறை தினமான நேற்று சிறுவன் ரெங்கநாதன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, தாய் சசிதேவி  அப்பகுதியில் உள்ள மளிகைக் கடைக்குச் செல்லவே, சிறுவனும் உடன் சென்றுள்ளார்.

அங்கு சென்ற சிறுவன், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஜெல்லி மிட்டாயை வாங்கித் தரும்படி கேட்டு அடம்பிடித்து அழுதுள்ளார். இதையடுத்து  சசிதேவி, ரெங்நாதனுக்கு ஜெல்லி மிட்டாய் வாங்கிக்கொடுத்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். 

மிட்டாயை சாப்பிட்டபடியே வீட்டுக்கு நடந்து வந்த சிறுவன்,  வழியிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து  அதிர்ச்சி அடைந்த சசிதேவி கதறி அழவே, அப்பகுதியில் இருந்த சிலர் சிறுவனை பெரம்பலூர் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த வைத்தியர்கள், வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் நகர பொலிஸார், அந்த மளிகைக் கடையில் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஜெல்லி மிட்டாய்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சௌமியா கூறுகையில், "ஜெல்லி மிட்டாய் உணவுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தக்கூடியது. அவ்வாறு அடைப்பு ஏற்பட்டால்,  உயிரிழப்பு நூறு சதவீதம் இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்தார். 

இதையடுத்து மருத்துவத்துறை அதிகாரி ராஜா கூறுகையில், "உடற்கூறு ஆய்வு முடிவு வெளிவந்த பின்னரே சிறுவனின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும்" என்றார்.

ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட குழந்தை தாய் கண்முன்னே உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது