கட்சி அர­சியல் செயற்­பா­டு­களே  மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு   தடை­யாக இருக்­கின்­றன. அர­சியல் செல்­வாக்கை பயன்­ப­டுத்தி பல அதி­பர்கள் நிய­மனம் பெற்­றுள்­ளார்கள். பலர் பழி­வாங்­கப்­பட்­டுள்­ளார்கள்.

தற்­போதும் கூட மலை­யக கல்வி  நிகழ்­வு­களில் அர­சியல் செல்­வாக்கு காணப்­ப­டு­கின்­றது என ஓய்வு நிலை பேரா­சி­ரியர் த. தனராஜ் தெரி­வித்தார். ஒரு சமூ­கத்தின் மேம்­பாட்­டுக்கு மட்­டுமே  அர­சியல் பயன்­பட  வேண்­டுமே தவிர ஒரு சமூ­கத்தை மட்டம் தட்­டு­வ­தற்கும்,  அழிப்­ப­தற்கும், ஒடுக்­கு­வ­தற்கும்  பயன்­பட கூடாது  என்றும் அவர் தெரி­வித்தார்.

மலை­ய­கத்தின் சம­கால அர­சியல் ,பொரு­ளா­தார ,கல்வி நிலை­மைகள் பற்றி அவர் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய நேர்­காணல் வரு­மாறு, 

கேள்வி: மலை­ய­கத்­தி­லுள்ள முக்­கிய  கல்­வியி­ய­லா­ளர்கள் என்ற வகையில்  மலை­ய­கத்தின் தற்­போ­தைய  கல்வி வளர்ச்சி எவ்­வா­றுள்­ளது?

பதில்: மலை­ய­கத்தின் கல்வி வளர்ச்­சியை ஒரு வர­லாற்று ரீதி­யாக பார்ப்­பது முக்­கி­ய­மா­ன­தாகும். தற்­போ­தைய நிலையில் மலை­ய­கத்தின் கல்வி நிலைமை சார்­ப­ளவில் உயர்­வ­டைந்­துள்­ளது. 1968 ஆம் ஆண்டு முதன் முறை­யாக  மலை­ய­கத்தை சேர்ந்த 50 பேருக்கு மாணவ ஆசி­ரியர் நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டன.

இது வர­லாற்று சம்­பவம் . இன்று மலை­ய­கத்தில் 12 ஆயிரம் பேர் ஆசி­ரி­யர்­க­ளாக இருக்­கின்­றனர். இவர்கள் நியா­ய­மான பட்­ட­தா­ரி­க­ளாவர். மலை­ய­கத்தில் ஓரிரு பாட­சா­லைகள்  தவிர்ந்த ஏனைய பாட­சா­லைகள் அனைத்­திலும் மலை­ய­கத்தை சேர்ந்­த­வர்­களே அதி­பர்­க­ளாக இருக்­கின்­றனர்.

இதே­வேளை 50 வருட காலத்தில் ஏனைய சமூ­கங்­க­ளுடன் ஒப்­பிடும் போது  மலை­யக கல்வி வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளது என சொல்ல முடி­யாது. ஆனால் ஒப்­பீட்டு அள­வி­லேயே மலை­யக கல்வி நியா­ய­மான வளர்ச்­சியை கண்­டுள்­ளது.

கேள்வி: அண்­மைக்­கா­ல­மாக   மலை­ய­கத்­திற்­கான தனிப் பல்­க­லைக்­க­ழகம் தொடர்­பாக பேசப்­பட்டு வரு­கின்­றதே? 

பதில்: மலை­ய­கத்­திற்கு தனிப் பல்­க­லைக்­க­ழகம் வேண்டும் என அண்­மைக்­கா­ல­மாக பேசப்­ப­ட­வில்லை. கடந்த 12 வரு­டங்­க­ளுக்கு முன்­பாக பேரா­சி­ரியர் சந்­தி­ர­சே­கரன் மலை­ய­கத்­திற்­கான தனிப் பல்­க­லைக்­க­ழகம் தொடர்­பாக கட்­டுரை ஒன்றை வீர­கே­சரி பத்­தி­ரி­கையின் ஊடாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். 

இதன் பின்னர் நானும் பல ஊட­க­வி­ய­லா­ளர்­களும் இவ்­வி­டயம் தொடர்­பாக கட்­டு­ரை­களை எழு­தி­யி­ருந்தோம். இதனைத் தொடர்ந்து பேரா­சி­ரி­யர்­க­ளான சின்­னத்­தம்பி, மூக்­கையா, கலா­நிதி சந்­தி­ரபோஸ் மற்றும் மொழி­வ­ரதன் போன்றோர் மலை­ய­கத்­திற்­கான தனிப் பல்­க­லைக்­க­ழகம் தொடர்­பாக பல கட்­டு­ரை­களை எழு­தி­னார்கள். 

இதே­வேளை, மலை­யக பல்­க­லைக்­க­ழகம் என்­பது பொருத்­த­மான ஒரு சொற்­பி­ர­யோகம் அல்ல. ஏற்­க­னவே இந்­நாட்டில் 14 தேசிய பல்­க­லைக்­க­ழ­கங்கள் இருந்­தன. திறந்த பல்­க­லைக் ­க­ழ­கத்­தையும் இணைத்­துக்­கொண்டால் 15 ஆகும். மேலும் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்தின் வவு­னியா வளாகம் தற்­போது தேசிய பல்­க­லைக்­க­ழ­க­மாக ஏற்­று­கொள்­ளப்­பட்­டுள்­ளது. ஆக மொத்­த­மாக நாட்டில் 16 தேசிய பல்­க­லைக்­க­ழ­கங்கள் இருக்­கின்­றன. இந்­நி­லை­யி­லேயே 17 ஆவது தேசிய பல்­க­லைக்­க­ழ­க­மாக மலை­ய­கத்­திற்­கான பல்­க­லைக்­க­ழகம் கோரப்­ப­டு­கின்­றது. மலை­ய­கத்­துக்­கான பல்­க­லைக்­க­ழகம் என்ற வார்த்­தையை நாம் முதலில் கைவிட வேண்டும். மலை­யகம் என்­பது ஒரு பிர­தேசம் மாத்­திரம் அல்ல. அது­வொரு கலா­சார அடை­யாளம்.  ஆனால் மலை­யக மக்­க­ளுக்­காக மாத்­திரம் பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்க முடி­யாது.

குறிப்­பாக, தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தை எடுத்­துக்­கொண்டால் அது­வொரு தேசிய பல்­க­லைக்­க­ழ­க­மாகும். அங்கு சிங்­களம், தமிழ், முஸ்லிம் என மூவி­னத்­த­வர்­களும் கல்வி கற்­கின்­றனர். 

ஆனாலும் முஸ்லிம் மக்­களின் கலா­சார மேம்­பாடு, சமூக மேம்­பாட்டின் அடித்­த­ள­மா­கவும் முஸ்லிம் சமூ­கத்தின் உந்து விசை­யா­கவும் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழகம் செயற்­ப­டு­வதை யாரும் மறுக்க முடி­யாது. 

இதன் அடிப்­ப­டை­யி­லேயே மலை­ய­கத்­திலும் தேசிய பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அதா­வது புதி­தாக உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள பல்­க­லைக்­க­ழகம் மலை­யக மக்­களின் கலா­சாரம், மலை­யக மக்­களின் வர­லாறு, அம் மக்­களின் பொரு­ளா­தார மேம்­பாடு போன்ற விட­யங்­களில் ஆழ­மாக செயற்­ப­டுத்த கூடி­ய­தாக இருக்க வேண்டும். பல்­க­லைக்­க­ழகம் மலை­ய­கத்தில் அமை­யப்­பெற உள்­ளதால் அம் மக்­களின் மேம்­பாட்­டிற்­கான உந்து விசை­யாக அது இருக்­கலாம்.

மலை­ய­கத்தில் பல்­க­லைக்­க­ழ­கத்தின் தேவை தொடர்­பாக ஒரு ஆய்வை செய்து அது­தொ­டர்­பான ஆவ­ணங்­களை அமைச்சர் மனோ கணே­ச­னிடம் கைய­ளித்தோம். அவரும் பல நட­வ­டிக்­கை­களை எடுத்தார். கடந்த 12 வரு­டங்­க­ளாக மலை­ய­கத்­திற்­கான பல்­க­லைக்­க­ழகம் ஒரு பேசுப்­பொ­ரு­ளாக மாத்­தி­ரமே இருந்து வரு­கின்­றது.

கேள்வி: மலை­ய­கத்­திற்­காக உரு­வாக்­கப்­பட்ட தேசிய கல்­வியற் கல்­லூ­ரியே இன்று பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­றதே? 

பதில்: தேசிய கல்­வியற் கல்­லூரி ஊடாக நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் மாணவ ஆசி­ரி­யர்­க­ளாக உரு­வாகி இருக்­கின்­றார்கள். அதன் பங்­க­ளிப்பை குறை கூற­மு­டி­யாது. இந்த கல்­வியற் கல்­லூ­ரியில் பெரும்­பா­லான மாண­வர்கள் தமிழ் மொழி பேசு­ப­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர். 

ஆனால் அங்கு பெரும்­பான்மை மொழியை அடிப்­ப­டை­யாக கொண்ட நிர்­வாக சேவையே காணப்­ப­டு­கின்­றது. பீடா­தி­ப­திகள் சிங்­க­ள­வர்­க­ளா­கவே இருக்­கின்­றார்கள். இதனால் பல பிரச்­சி­னைகள் பதி­வாகி வரு­கின்­றன. 

இதன் அடிப்­ப­டையில் அந்த கல்­வியற் கல்­லூரி முக்­கி­ய­மற்­றது என்றும் தேவை­யற்­றது எனவும் கூறி விட­மு­டி­யாது. அதில் உள்ள குறை­பா­டு­களை களைந்து கல்­லூ­ரியை மேம்­ப­டுத்த வேண்­டி­யது முக்­கி­ய­மா­ன­தாகும். 

ஆனால் ஸ்ரீபாத கல்­வியற் கல்­லூ­ரி­யுடன் மலை­ய­கத்­திற்­கான தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்தை தொடர்­பு­ப­டுத்த வேண்­டிய தேவை கிடை­யாது. வர­லாற்று ரீதி­யாக பார்க்கும் போது பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு தெரி­வாகும் மலை­யக மாண­வர்­களின்  எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கின்­றது. இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும்.. மேலும் தொழி­லா­ளியின் பிள்ளை பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வாகும் போது அவர்­களின் கல்வி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதில் பொரு­ளா­தார  ரீதி­யாக பாரிய பிரச்­சி­னை­களை முகம் கொடுக்­கின்­றார்கள். சில மாண­வர்கள் பகு­தி­நே­ர­மாக தொழில் செய்து கொண்டும் படிக்கும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது. இதனால் தனது படிப்பில் கூடுதல் அவ­தானம் செலுத்த முடி­யாமல் போகின்­றது. மேலும் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இவர்­களால் திறமை சித்தி பெற­மு­டி­யாத நிலையும் ஏற்­ப­டு­கின்­றது. ஆனால் மலை­ய­கத்தில் ஒரு பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­படும் போது அந்த மாண­வர்கள் இல­கு­வாக சென்று கல்வி கற்கும் நிலைமை உரு­வாகும்.

கேள்வி: மலை­ய­கத்தில் தேசிய பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­பட்­டாலும் அந்த பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரி­வாகும் மலை­யக மாண­வர்­களின் எண்­ணிக்கை குறை­வா­கவே காணப்­படும் என்ற குற்­றச்­சாட்டு உள்­ளதே?

பதில்: இவ்­வாறு குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. எனினும் நாட்டில் அண்­மையில் உரு­வான எந்த பல்­க­லைக்­க­ழ­கமும் முழு­மை­யான பல்­க­லைக்­க­ழ­க­மான உரு­வாக்­கப்­ப­ட­வில்லை.  குறிப்­பாக யாழ். பல்­க­லைக்­க­ழகம் பர­மேஸ்­வரா கல்­லூ­ரியின் ஒரு வளா­க­மா­கத்தான் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதே­போன்று தான் மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழகம் வந்­தா­று­முல்லை  மகா­வித்­தி­யா­ல­யத்தின் ஒரு வளா­க­மாக ஆரம்­பிக்­கப்­பட்­டது. பிற்­கா­லத்­தி­லேயே இவை தேசிய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளாக மாற்றம் பெற்­றன. எடுத்த எடுப்பில் ஒரு இடத்தில் முழு­மை­யான பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைக்க முடி­யாது.

மேலும்  மலை­ய­கத்­திலும் முத­லா­வ­தாக பேரா­தெ­னிய பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஒரு வளா­க­மாக அட்டன் அல்­லது வேறு­ஒரு பகு­தியில் வளா­கத்தை ஆரம்­பிக்­கலாம். இவ்­வாறு ஆரம்­பிக்­கப்­படும் வளா­கத்தில் கலைப்­பீடம், வர்த்­தகம் தொடர்­பாக கற்­கை­நெ­றி­களை முதலில் ஆரம்­பிக்­கலாம். இவற்றை கற்­பிக்க கூடி­ய­வர்கள் மலை­ய­கத்தில் நிறைய பேர் இருக்­கின்­றார்கள். இந்த நட­வ­டிக்­கை­யா­னது பிற்­கா­லத்தில் மலை­ய­கத்தில் தேசிய பல்­க­லைக்­க­ழகம் உரு­வா­கு­வ­தற்கு ஒரு அத­டித்­த­ள­மாக காணப்­படும். இங்கு மாண­வரின் தொகை போது­மா­ன­தாக இருக்­கின்­றதா என்­பது முக்­கி­யத்­துவம் இல்லை. பல்­க­லைக்­க­ழகம் உரு­வான பின்னர் மாண­வர்­களின் எண்­ணிக்கை இயல்­பா­கவே அதி­க­ரிக்கும்.  இந்த விட­யத்தில் சமூக, அர­சியல், கட்சி வேற்­று­மை­யின்றி அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும்.

கேள்வி : மலை­யக மாண­வர்­க­ளி­டையே பல்­க­லைக்­க­ழக அனு­மயை அதி­க­ரிப்­ப­தற்­கான திட்­ட­மி­டல்கள் எவ்­வா­றா­ன­தாக இருக்க வேண்டும்?

பதில்: மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்குள் அதி­மாக உள்­வாங்­கப்­பட வேண்­டு­மென்றால் ஒவ்­வொரு பாட­சா­லையின் ஆசி­ரி­யர்­களும்,அதி­பர்­க­ளுடன் அர்ப்­ப­ணிப்­பு­டனும், பொறுப்­பு­டனும் செயற்­பட வேண்டும். மாண­வர்­களை பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்குள் உள்­வாங்கும் போது மலை­யக மாண­வர்­க­ளுக்கு விசேட அனு­மதி வழங்­கலாம். பெரும்­பான்­மை­யின மாண­வர்­க­ளுக்கு விசேட சலு­கைகள் வழங்­கப்­படும் போது 30 வரு­டங்கள் பின்­தங்­கிய எமது மலை­யக மாண­வர்­க­ளுக்கு எந்த சலு­கையும் வழங்­கப்­ப­ட­வில்லை. இது­தொ­டர்­பான கோரிக்­கை­களை எமது அர­சியல் தலை­வர்கள் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் முன்­வைக்க வேண்டும். ஆனாலும் இவர்கள் மலை­யக மக்­களின் நன்மை கருதி தொழிற்­சங்க அர­சியல் பிரச்­சி­னைக்கு அப்பால் நின்று செயற்­ப­டு­வார்­களா என்ற சந்­தே­கமும் இருக்­கின்­றது.

கேள்வி: மலை­யக கல்வி வளர்ச்­சியில் அர­சியல் குறுக்­கீ­டுகள் எந்த வகையில் உள்­ளன? 

பதில்: மலை­ய­கத்தில் பல அதி­பர்கள் அர­சியல் செல்­வாக்கில் இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளார்கள். பல அதி­பர்கள் அர­சியல் செல்­வாக்­குடன் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்கள். அர­சியல் தலை­யீடு என்­பது மலை­ய­கத்தில் பார­தூ­ர­மான விட­ய­மாகும். அதா­வது பின்­தங்­கிய மலை­யக சமூ­கத்தில் அர­சியல் தலை­யீடு என்­பது ஒரு சமூ­கத்தை மேம்­ப­டுத்தும் வகையில் அமைய வேண்டும். ஆனால் மலை­ய­கத்தில் அர­சியல் ரீதி­யாக பழி­வாங்கும் சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ளன. இது பரி­தா­ப­மான நிலை­யாகும். பாட­சாலை வைப­வங்­களில் கூட அர­சியல் கட்­சிகள் செல்­வாக்கு செலுத்­து­கின்­றன.

கேள்வி: ஊவா மாகா­ணத்தில் இயங்­கி­வரும் அல் முஸ்­தபா சர்­வ­தேச பல்­க­லைக்­க­ழகம் அண்­மையில் தேசிய ரீதியில் பல சர்ச்­சை­களை தோற்­று­வித்­தி­ருந்­தது. உண்­மையில் இந்த பல்­க­லைக்­க­ழகம் மலை­யக சமூ­கத்­துக்கு ஏற்­பு­டை­யதா?

பதில்: அல் முஸ்­தபா பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் பெரிய வர­லாறு உள்­ளது. இது  பல்­க­லைக்­க­ழ­கங்கள் மானி­யங்கள் ஆணைக்­குழு மற்றும் சர்­வ­தேச பல்­க­லைக்­க­ழ­கங்கள் சங்கம் ஆகி­ய­வற்றில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அல் முஸ்­தபா பல்­க­லைக்­க­ழகம் சர்­வ­தேச ரீதியில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஒன்­றாகும். இதன் அர­சியல் பின்­னணி பற்றி தெரி­யாது. ஆனால் 520 மாண­வர்­களில் 30 மாண­வர்­களே முஸ்லிம் மாண­வர்­க­ளாவர்.  3 வரு­டங்­களில் 500க்கும் மேற்­பட்ட மாண­வர்கள் பட்­டப்­ப­டிப்பை முடித்­த­வர்­க­ளா­கி­யி­ருப்­பார்கள். இது­வொரு நல்ல விட­ய­மாக இருந்­தி­ருக்கும். 

ஆனால் இங்கு அரபு மொழி படிப்­பிக்­கப்­ப­டு­வ­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. இந்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் 32 துறைசார்  பாடங்கள் காணப்­ப­டு­கின்­றன. அதில் இரண்டு பிரி­வு­களே குர்ஆன் மற்றும் அரபு. இவை மேல­திக பாடங்­க­ளா­கவே கரு­தப்­ப­டு­கின்­றன. இவற்றில் சித்­தி­ய­டைய வேண்டும் என்ற நிர்ப்­பந்­தமும் இல்லை. குர்­ஆ­னையும்  அர­பி­யையும் கற்­றுக்­கொள்­வதால் யாரும் தீவி­ர­வா­தி­க­ளாக மாறி­விட மாட்­டார்கள். 

இந்­நி­லையில் அண்­மையில் ஏற்­பட்ட பிரச்­சி­னையின் பின்னர் குர்ஆன் மற்றும் அரபு கற்­பிக்கக் கூடாது  என உத்­தி­யோ­க­பூர்வ கடிதம் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதன்­பின்­னரும் அந்த மாண­வர்­க­ளுக்கு கல்வி கற்­ப­தற்கு தடை விதிக்கக் கூடாது. இன்னும் இரண்டு வரு­டங்­களில் 500க்கும் மேற்­பட்ட மாண­வர்கள் பட்­ட­தா­ரி­க­ளாகப் போகின்­றார்கள். இது அந்த மாண­வர்­களின் வாழ்க்கை பிரச்­சி­னை­யாகும். 

கேள்வி: பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் ஆயிரம் ரூபா சம்­பள உயர்வு கோரிக்கை பற்றி ?

பதில்: மலை­யக பெருந்­தோட்ட சமூ­கத்தில் மிக முக்­கிய பிரச்­சி­னை­யாக இந்த சம்­பளப் பிரச்­சினை காணப்­ப­டு­கின்­றது. ஆயிரம் ரூபா சம்­பள கோரிக்கை மிக நெடுங்­கா­ல­மாக இருந்து வரு­கின்­றது. அர­சியல் ரீதி­யான முரண்­பாடு மற்றும் தொழிற்­சங்க போட்டி கார­ண­மாக இந்த சிரிய தொகையை கூட பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் இருக்­கின்­றது. இந்த கூட்டு ஒப்­பந்தம் தற்­போது தேவை தானா என்ற கேள்­வியும் எழுந்­துள்­ளது.    தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பள உயர்வு வழங்க வேண்டும் என கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர்கள் ஒன்றாக கூடி ஒரு நாள் முழுதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் இந்த கோரிக்கை தோல்வியே கண்டது. தமது சமூகத்துக்காக அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து போராடி இருந்து இந்த சம்பள கோரிக்கையை வென்றிருக்கலாம்.  வருமானமின்றி அம் மக்கள் எவ்வாறு தமது பிள்ளைகளை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியும். எவ்வாறு சமூக நகர் நோக்கி செல்ல முடியும். இதற்கு முட்டுக் கட்டையாக அவர்களது  பொருளாதாரம் காணப்படுகின்றது. இந்த அரசியல்வாதிகள் மலையக சமூகத்தை பலவீனமாக்கியுள்ளார்கள். இந்த அரசியல் வாதிகளின் அவர்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாக இருந்தால் அந்த சமூகத்தின் மேம்பாட்டுக்காக ஒன்றுபட்டு செயற்பட்டேயாக வேண்டும்.

கேள்வி : எதிர்வரும்   தேர்தல்களில் மலையக மக்களின் பங்கு எவ்வாறானதாக இருக்குமென நீங்கள் மதிப்பிடுகின்றீர்கள்?

பதில்: இன்று மலையகத்தின்  விழிப்புணர்வு அரசியல் ரீதியாகவும் அதிகரிக்கும் என்றால் மலையக சமூகமும் ஏனைய சமூகங்களை போன்று முன்னேறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. மலையகத்தில் உள்ள  தொழிற்சங்கவாதிகள், அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் இவர்களை ஒன்றுபடுத்தக் கூடிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். கட்சி, இன பேதமின்றி இவ்வாறு ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டால் எதிர்கால தேர்தலை தீர்மானிக்கும் சக்திகளாக நாம் இருக்க முடியும். 

இதேவேளை மலையக மக்களின் நன்மை கருதி நடைமுறையில் சாத்தியப்படக் கூடிய கோரிக்கைகளை அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து முன்வைக்க வேண்டும் என்பதும் முக்கிய விடயமாகும்.


நேர்­காணல் : செ. லோகேஸ்­வரன்