வடக்கு மாகாண சபையில் ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் ஒதுங்கியிருக்க வேண்டும். அதனை விடுத்து எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மாகாண சபை ஆட்சியில் இருந்த போது அதில் அங்கம் வகித்த அமைச்சர்கள் சிலர் மீது ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த நிர்வாகத்திலேயே இந்த குற்றச் சட்டு வைக்கப்பட்டது.

அப்படியானால் முதலில் அவர் தனது பதவியிலிருந்து விலகி நீதியான விசாரணைக்கு இடமளித்திருக்க வேண்டும்.விசாரணைக்கு பதவியில் இருந்து ஒதுங்கி ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருப்பார்.

வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் செய்த தவறினால் இப்போது நீதிமனரத்தின் ஊடாக அவரது நிர்வாக பிழைகள் வெளியில் வந்துள்ளன.

இவ்வற்றை செய்யாமல் விட்டுவிட்டு தமிழர்களின் பிரச்சனைகளை தீர்க்க போகின்றோம் என எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை.இவர்களின் பேரணியால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.என்றார்.