புதிய அரசியல் கலாசாரத்தினை நாட்டில் உருவாக்குவதற்கான மாற்று சக்திக்கு தலைமை வழங்குவதற்காகவே நாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றோம். தேசிய மக்கள் சக்தி என்ற பரந்துபட்ட கூட்டணியின் சார்பிலேயே எமது வேட்பாளர் இன்று பெயரிடப்படுவாரென மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்பதில்  ஜே.வி.பி. இம்முறை உறுதியாக இருந்தமைக்கான காரணம் என்ன?

பதில்:- 1994ஆம் ஆண்டிலிருந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு தற்போது வரையில் முயற்சிகள் எடுக்கப்பட்டே வருகின்றன. நாம் நிறைவேற்று அதிகாரத்தினை முழுமையாக ஒழிப்பதற்காக 20ஆவது திருத்தச் சட்டத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். எனினும் அச்சட்டத்தினை நிறைவேற்றுவது நடைமுறைச் சாத்தியமற்றதாக இருக்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் ஜனாதிபதித் தேர்தல் அண்மித்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலை யாராலும் பிற்போட முடியாது.

இத்தகைய பின்னணியில் பார்க்கின்றபோது நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தவல்லதாக தற்போதுவரையில் ஜனாதிபதித் தேர்தலே காணப்படுகின்றது. மேலும், சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்த ஆட்சி மற்றும் ராஜபக் ஷ குடும்ப ஆட்சி ஆகியவற்றின் அனுபவம் மக்களுக்கு உள்ளது. இரண்டு ஆட்சியாளர்களுமே ஊழல் மோசடிகள் மிக்க திருடர்கள். மக்கள் இந்த ஆட்சியாளர்களால் வெறுப்படைந்துள்ளார்கள். இதனால் இத்தரப்பினருக்கு மாற்றாக புதிய ஆட்சியையும், தலைமைத்துவத்தினையும் நாடு வேண்டி நிற்கின்றது. இதனடிப்படையில் தான் நாம் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கான உறுதியான முடிவினை எடுத்துள்ளோம்.

கேள்வி:- ஜே.வி.பி.யின் தலைமையில் கூட்டணியொன்று உருவாக்கப்பட்டுள்ளதா?

பதில்:- ஆம், நாம் பல்வேறுபட்ட 28 அமைப்புக்களை ஒன்றிணைத்து பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைத்துள்ளோம். 'தேசிய மக்கள் சக்தி' என்ற பெயரில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் செயற்றிட்டம் ஆகியவை  கலந்துரையாடல்களின் மூலம் இறுதி செய்யப்பட்டுள்ளன.  இந்தக் கூட்டணியே அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுக்கவுள்ளது.

கேள்வி:- 'தேசிய மக்கள் சக்தி' கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜே.வி.பி.யினைச் சேர்ந்தவரா?

பதில்:- தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியினை பிரதிநிதித்துவப்படுத்தியே எமது வேட்பாளர் பெயரிடப்படுவார். ஞாயிற்றுக்கிழமை(இன்று) தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் மாநாட்டின்போது அவர் தெரிவு செய்யப்படுவார். அவர் எமது கட்சியை சார்ந்தவரா இல்லையா என்பதற்கு அப்பால், தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியின் சார்பில் புதிய சின்னத்தில், புதிய வேட்பாளர் பெயரிடப்படுவார்.

கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையிலேயே போட்டி ஏற்படுவது வழமையாக இருக்கின்றது. இம்முறை அதுவும் மும்முனைக்கு செல்லும் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தங்களது தரப்பும் வேட்பாளரை நிறுத்தினால் எவ்வாறான நிலைமைகள் ஏற்படும்?

பதில்:- எம்மை மூன்றாவது அணி என்று கூறுகின்றார்கள். அதுபொருத்தமற்றதாகும். நாம், இந்த நாட்டில் பிரதான கட்சிகள் என்று கூறிவரும் பச்சை, நீலம் உள்ளிட்டவர்களுக்கு மாற்று அணியாகவே இருக்கின்றோம். பிரதான கட்சிகளுக்கிடையில் மும்முனை போட்டி ஏற்படுவது உறுதியாக இல்லை. எவ்வாறாயினும் எமது தரப்பினையும் கருத்திற்கொள்கின்றபோது இம்முறை மும்முனைப்போட்டி ஏற்படுவது தவிர்க்க முடியாதவொன்றாகும்.

கேள்வி:- நீங்கள் குறிப்பிடுகின்றதைப்போன்று மும்முனை போட்டி ஏற்பட்டால் 51சதவீதத்தினை யாரும் பெறமுடியாது போய்விடுமல்லவா? ஆகவே உங்களுடைய தரப்பு ஈற்றில் போட்டியிலிருந்து விலகும் தீர்மானத்தினை எடுக்குமா?

பதில்:- ஆம், மும்முனை போட்டி ஏற்படுகின்றபோது எந்தவொரு தரப்பும் 51சதவீதத்தினை பெறுவது கடினமாகும். அவ்வாறான நிலைமை ஏற்படுகின்றபோது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு விருப்பு வாக்குமுறைமையை பயன்படுத்தமுடியும். ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் போட்டியிலிருந்து பின்வாங்கப்போவதில்லை.

கேள்வி:- எந்தவொரு தரப்பினரும் 51சதவீதத்தினை பெறக்கூடாது என்ற நிலைமையை உருவாக்கும் திரைமறைவு திட்டத்துடனே ஜே.வி.பி தேர்தல் களத்தில் இறங்குகின்றது என்ற விமர்சனங்களை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தினை ஏற்படுத்துவதற்கான தலைமைத்துவத்தினை வழங்குவதே எமது நோக்கமாகும். நாம் மாற்றுச் சக்தியாக உருவாகிவிடுவோம் என்று அஞ்சுகின்ற தரப்புக்களே இவ்வாறான விமர்சனங்களை ஆரம்பத்திலேயே வெளிப்படுத்துகின்றன. அந்த உபாயத்தினை நாம் நன்கு அறிவோம்.

கேள்வி:- மாற்று சக்தியாக உருவாக முனையும் உங்கள் தரப்புக்கு பிரதான கட்சிகள் சவாலாக இருக்குமல்லவா?

பதில்:- பாகிஸ்தானை எடுத்துக்கொண்டால் இம்ரான் கானின் சிறிய கட்சியொன்று தான் ஆட்சி அமைத்துள்ளது. அதுபோன்று மக்களின் வெறுப்பும், மாற்றத்தை நோக்கிய விருப்பும் எம்மை வலுவுறச் செய்யும். இலங்கையில் புதிய அரசியல் கலாசாரத்தினை ஏற்படுத்துவதே எமது இலக்காகும்.

கேள்வி:- உங்களுடைய வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு சிறுபான்மையினரின் ஆதரவு அவசியமல்லவா?

பதில்:- ஆம். அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரையே பெயரிடவுள்ளோம்.

கேள்வி:- உங்களுடைய பரந்து பட்ட கூட்டணியில் தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் இடம்பெற்றுள்ளனவா?

பதில்:- எமது தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் தமிழ் முஸ்லிம் தரப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இவை பாரிய கட்சிகளாக இல்லாது விட்டாலும் மக்களுடன் நெருக்கமாக பணியாற்றுகின்ற சமூக அமைப்புக்களாகும். இதனைவிடவும் தொழிற்சங்கங்களும் இடம்பெற்றுள்ளன. எதிர்காலத்தில் மேலும் சில தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் எம்முடன் இணைந்துகொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

தற்போது அத்தகைய தரப்பினர்களுடன் நாம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். அக்கலந்துரையாடல்கள் முன்னேற்றகரமாக இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக கூறுவதனால் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி போன்றவற்றுடன் கலந்துரையாடல்கள் பலமட்டங்களில் இடம்பெற்றுள்ளன.

கேள்வி:- பிரதான முஸ்லிம் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்டவை பிரதான தரப்புக்களுடன் அல்லவா இருக்கின்றன?

பதில்:- நீங்கள் குறிப்பிட்ட முஸ்லிம் கட்சிகளின் சில தரப்பினர்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். அடுத்துவரும் காலத்தில் அதில் முன்னேற்றங்கள் ஏற்படுமென எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நீங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ள நிலையில் உங்களது கூட்டணியில் தமிழ்த் தரப்பின் வகிபாகம் எவ்வாறு உள்ளது?

பதில்:- மைத்திரி- – ரணில் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்தே ராஜபக் ஷவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. எனினும் தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியில் எதனையுமே அவர்கள் நிறைவேற்றியிருக்கவில்லை. அதுமட்டுமன்றி நாட்டின் தேசிய விடயங்களில் கூட அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கவில்லை. இதுமிகவும் வெளிப்படையான விடயமாகும். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, தமிழ் மக்களோ, ராஜபக் ஷ குடும்பத்தினருக்கோ அல்லது ஏனைய தரப்பினருக்கோ ஆதரவளிப்பதற்கோ அல்லது வாக்களிப்பதற்கோ எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை. அவ்வாறான நிலைமையில் நாம் தமிழ்த் தரப்பினருடன் பேச்சுக்களை நடத்துவதற்கு முயற்சிகளை எடுத்துள்ளோம். குறிப்பாக கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி எமது நேர்மையான பயணத்தில் அவர்களையும் இணைத்துக் கொள்வதற்கு தயாராகவே உள்ளோம்.

கேள்வி:- ஜனாதிபதி கையாளக்கூடிய விடயங்கள் சார்ந்த தேசிய கொள்கைகளை வகுத்துள்ளீர்களா?

பதில்:- நாம் தேசிய புத்திஜீவிகள் ஒன்றியம் என்ற கட்டமைப்பினை ஸ்தாபித்திருந்தோம். அந்த ஒன்றியத்தில், துறைசார் நிபுணர்களை உள்ளடக்கி கொள்கை பிரகடனம் ஒன்றை  உருவாக்கியிருந்தோம். இந்தக் கொள்கை பிரகடனமானது கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி மக்களிடத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய புத்திஜீவிகள் ஒன்றியம் எமது பரந்துபட்ட கூட்டணியில் அங்கத்துவத்தினைக் கொண்டுள்ளது. மேலும், குறித்த ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்டுள்ள கொள்கை பிரகடனத்தினையே நாம் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனமாக மக்கள் மத்தியில் முன்வைக்கவுள்ளோம்.

கேள்வி:- ஜே.வி.பி. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில் உங்களது வேட்பாளர் வெற்றிபெற்றால் அது உடனடி சாத்தியமாகுமா?

பதில்:- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் கொள்கையளவில் எவ்விதமான மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை.  பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியமாகின்றது. ஆனால் தற்போதைய பாராளுமன்றத்தில் அதனைப் பெறமுடியாது. அடுத்த வருடம் பெப்ரவரி 8ஆம் திகதியாகின்றபோது தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் நான்கரை வருடங்களாகி விடும். எமது வேட்பாளர் வெற்றிபெறும் பட்சத்தில் நாம் பாராளுமன்றத்தினைக் கலைத்து பாராளுமன்றத் தேர்தலொன்றுக்கே செல்வோம். அதன்போது மக்கள் நாட்டினை சீரமைக்கும் செயற்றிட்டத்திற்கு ஆணை வழங்க வேண்டும். அதற்கான தலைமையேற்கவே நாம் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.

கேள்வி:- பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தாபய களமிறக்கப்பட்டுள்ள நிலையில் அவர் உங்களுக்கு சவாலாக அமைவாரா?

பதில்:- ராஜபக் ஷ குடும்பத்தின் மிகவும் பலவீனமான வேட்பாளரே கோத்தாபய ராஜபக் ஷ ஆவார். அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை, நிருவாக சட்டங்களை மீறியமை, வெள்ளைவான் கடத்தல்கள், ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டமை, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, முக்கியமான நேரத்தில் இராணுவ சேவையிலிருந்து வெளியேறி வெளிநாடு சென்றமை எனப் பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. ஆகவே அத்தகைய பலவீனமான வேட்பாளர் எமக்கு ஒருபோதும் சவாலாக இருக்கமாட்டார்.

கேள்வி:- மறுபக்கத்தில் சிறுபான்மை தரப்புக்களின் பங்கேற்புடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ரணில், கரு, சஜித் ஆகிய மூவரில் ஒருவர் களமிறங்குகின்றபோது உங்களுக்கு மிகப்பெரும் சவால் ஏற்படுமல்லவா?

பதில்:- அவர்களுடன் கூட்டணி அமைப்பதில் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கு தீர்வு காணப்பட்டு ரணில், கரு, சஜித் ஆகிய மூவரில் யார் களமிறங்கினாலும் கொள்கையில் மாற்றமில்லை. இங்கு நபர்கள் முக்கியமல்ல. களமிறங்கும் தரப்புக்களின்  கொள்கைகளே முக்கியமானவையாகின்றன. மத்திய வங்கி பிணைமுறி மோசடிகளையும், நாட்டைத் தாரைவார்க்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையை கடந்த நான்கு வருடங்களாக நாம் அனுபவரீதியாக கண்டிருக்கின்றோம். இதனைவிடவும், மோசடியாளர்களையும், திருடர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான முதுகெலும்பு  கூட அவர்களுக்கு இல்லை என்பதும் வெளிப்படையான விடயமாகின்றது.

மேலும், ரணில் தரப்பிலும் சரி, மஹிந்த தரப்பிலும் சரி நாட்டினை சீரமைக்க முடியாது தோல்வியுற்றவர்களே தேர்தலில் களமிறங்கப் போகின்றார்கள். அவர்களின் கொள்கைகளிலும் மாற்றங்கள் இல்லை. ஆகவே நாட்டினை படுகுழிக்குள் கொண்டு செல்லும் இவ்விரண்டு தரப்புக்களையும் தோல்வியடையச் செய்யவேண்டும். அதற்கான ஆணையை மக்கள் எமக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கேள்வி:- நாட்டில் காணப்படும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக கோத்தாபய ராஜபக் ஷ 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்று கூறியுள்ளார். ஐ.தே.கவின் தரப்பில் கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பினை முன்னெடுக்கலாம் என்று வாக்குறுதி அளிக்கலாம். இவ்விடயத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- மஹிந்த 13பிளஸ் தருவோம் என்றார். மைத்திரி– ரணில் கூட்டு புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவோம் என்று கூறியது. ஆனால் அவை அனைத்துமே தேர்தலுக்கான வாக்குறுதிகளேயாகும். நாங்கள் நடைமுறைச் சாத்தியமான விடயத்தினையே குறிப்பிடுவோம். தேசிய புத்திஜீவிகள் ஒன்றியத்தின் கொள்கை பிரகடனத்தில் எமது நிலைப்பாடு கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பாக உயிர் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டு சமஅந்தஸ்தினை ஏற்படுத்துவதே எமது நிலைப்பாடாகும். அதிகாரப்பகிர்வு குறித்த விடயங்களை கலந்துரையாடுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். அதனைவிடவும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைகள், காணாமலாக்கப்பட்ட உறவினர்கள், கலாசாரத்திற்கான பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களுக்கும் உடனடியாக தீர்வுகளை எட்டவேண்டியுள்ளது. நாம் அவற்றில் கூடுதலான கரிசனையை கொண்டிருப்போம்.

கேள்வி:- தற்போதைய சூழலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள கோத்தாபய நாட்டின் தேசிய பாதுகாப்பினை அதிகம் முன்னிலைப்படுத்துகின்றார், ஐ.தே.க தரப்பில் ஜனநாயகத்தினையும் பொருளாதாரத்தினையும் முன்னிலைப்படுத்த விளைகின்றார்கள். உங்களுடைய வேட்பாளர் எத்தகைய விடயத்திற்கு முன்னுரிமை அளிப்பவராக உள்ளார்?

பதில்:- ஊழல் மோசடிகளற்ற, அதிகார துஷ்பிரயோகங்களற்ற, அடிப்படை உரிமைகளை, ஜனநாயகத்தினை கட்டியெழுப்பி பாதுகாக்கின்ற, ஸ்திரமான பொருளாதாரத்தினை ஏற்படுத்தவல்ல, ஒரு தலைமைத்துவத்தினையே ஆட்சியில் அமர்த்தி உண்மையான கொள்கை ரீதியான நல்லாட்சியை முன்னெடுப்பதே இலக்காக கொண்டிருக்கின்றோம். இவ்விடயங்கள் அனைத்தையும் நடைமுறைச் சாத்தியமாக்கும் சிந்தனைகளை கொண்டவராகவே எமது வேட்பாளர் இருப்பார்.

கேள்வி: 2015ஆம் ஆண்டு தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகள் இருந்ததாக  தற்போது வரையில் குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில் இடதுசாரித்துவ கொள்கையுடைய தலைமையொன்று மேலெழுவதென்பது சாத்தியமாகுமா?

பதில்:- வெளிநாடுகளின் தலையீட்டினாலேயே எமது நாட்டின் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. எமது நாட்டின் உள்ளக விடயங்கள் எந்தவொரு வெளித்தரப்பினரும் தலையீடு செய்வதற்கு நாம் உடன்படப் போவதில்லை. இந்த நாட்டின் மக்களின் மனசாட்சிக்கு உட்பட்டு ஆட்சியமைப்பதே எமது நோக்கமே தவிர வெளித்தரப்புக்களின் விருப்புக்கு அமைய செயற்பட்டு ஆட்சியைப் பெறுவதற்கு நாம் தயாரில்லை.

பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தாபய பெயரிடப்படும் தினத்தன்று காலையில் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி செயலாளரும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்துள்ளார்கள். அங்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவர்கள் அமெரிக்காவிற்கு எதிரானவர்கள் போன்று பேசுகின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சியும் இவ்வாறு தான் இரட்டை வேடம் போடப்பார்க்கின்றது.

கேள்வி:- ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கவுள்ள உங்களுடன் இராஜதந்திர தரப்புக்கள் கலந்துரையாடவில்லையா?

பதில்:- ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாம் எந்தவொரு நாட்டின் இராஜதந்திர தரப்புக்களுடனும் கலந்துரையாடவில்லை. சாதாரணமாக அரசியல் கட்சி என்ற அடிப்படையிலேயே தொடர்புகளைக் கொண்டிருக்கின்றோம்.

நேர்­காணல்:- ஆர்.ராம்