வடமாகாண கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு நாவலர் மணிமண்டபத்தில் நேற்று  (17) நடைபெற்றது. 

இந்த சந்திப்பின்போது ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், 

புதிய சந்தைபடுத்தல் உலகில் எவ்வாறு சுதந்திரமாக துரிதமாக ஒரு கூட்டுறவு சங்கம் என்ற ரீதியில் உங்களை இயங்கவைக்கலாம் என்பதே வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கி ஆரம்பிப்பதன் முக்கிய நோக்கமாகும் . 

நிலம் நீர் இருக்கும் போது வாழ்வாதாரத்திற்கு மக்களுக்கு நிதி வேண்டும் எனவே அதற்கான முயற்சிதான் இந்த வடமாகாணத்திற்கான கூட்டுறவு அபிவிருத்தி வங்கி. இங்கு உங்களுடைய சுதந்திரம் முழுமையாக பாதிக்கப்படாமல் எவ்வகையில் பாதுகாக்கப்படவேண்டுமோ அவ்வகையில் பாதுகாக்கப்படும்; என்று குறிப்பிட்டார்.

இங்கு உள்ள கூட்டுறவு சங்கங்களில் சில கூட்டுறவு சங்கங்கள் பாரியளவிலான முயற்சியுடனும்  சில சங்கங்கள்  வீழ்ச்சியுடனும் செயற்படுகின்றன. அவற்றை ஒன்றிணைத்து அந்த சங்கங்களின் தனித்தன்மையுடன் சுதந்திரத்தினையும் பாதுகாத்து ஒன்றுகூடி செயற்படும்போது எந்த தன்மையுடன் இருக்கலாம் என்ற திட்டமிடலே இந்த வங்கியின் மையக்கருத்தாகும்  என்று ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடமாகாண கூட்டுறவு திணைக்களத்தின் ஆணையாளர் பொ.வாகீசன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.