ஆட்சி மாற்றம் குறித்து தொடர்ந்து பேசி வரும் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர்களின் கனவு கானல் நீர் போன்றது என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

“ நீட் தேர்வு விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு தொடர்கிறது. நீட்டுக்கு எதிராக கடைசி நிமிடம் வரை போராடிய ஒரே மாநிலம் தமிழகம் தான். சந்தர்ப்பம் வரும்போது மீண்டும் போதிய அழுத்தத்தை கொடுப்போம். 

திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை வீதி வழியாக முதன்முதலில் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கத்தோலிக்கர்கள் வேளாங்கண்ணி செல்வதற்கும். இஸ்லாமியர்கள் நாகூர் செல்வதற்கும். இந்துக்கள் ராமேஸ்வரம் செல்வதற்கும் வசதியாக அந்தந்த வழித்தடங்களில் தூத்துக்குடியிலிருந்து பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. 

தி.மு.க.வைப் பொறுத்தவரை ஸ்டாலின், கனிமொழியின் ஒரே இலட்சியம் ஆட்சியை கைப்பற்றுவது தான். ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பணி என்னவென்று தெரியாமல் கனிமொழி இருக்கிறார். எப்போது பார்த்தாலும் ஆட்சி மாற்றம் பற்றி பேசுகிறார் .

பாராளுமன்ற தேர்தலின்போது ஆட்சி மாற்றம் என்றார். மத்தியில் ஆட்சி மாறியது. வேறு அமைச்சர்கள் கொண்டு பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. சட்ட பேரவையிலும் ஆட்சிமாற்றம் என்றார். ஆனால் அவர்களின் கனவு கானல் நீர் போலானது. ஆட்சி அதிகாரம் மீது தான் அவர்களின் கனவு இருக்கிறதே தவிர, மக்கள் பணி செய்யும் முகாந்திரம் ஏதும் அவர்களுக்கு இல்லை.. சட்டப்பேரவையிலும் பாராளுமன்றத்திலும் மக்கள் குரலை எழுப்பும் ஒரே கட்சி அ.தி.மு.க. தான் .” என்றார்.