மனுஸ் மற்றும் நவுருத்தீவில் அமைந்திருக்கும் ஆவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை கனடாவில் மீள்குடியேற்ற சிரிய அகதி  அறிமுகப்படுத்திய திட்டத்திற்கு ஆவுஸ்திரேலியர்கள் 1 இலட்சம் டொலர்களுக்கு மேல் நிதி சேகரித்திருக்கின்றனர்.

ஹசன் அல் கோண்டர் என்ற சிரிய அகதி கனடாவில் தஞ்சம் வழங்கப்படும் முன், ஏழு மாத காலம் மலேசிய விமான நிலையத்தில் தவித்து வந்தார். பின்னர், கனடாவில் அவருக்கு தஞ்சம் வழங்கப்பட்டு அங்கு குடியேறினார். இந்த சூழலில், ஆவுஸ்திரேலியாவின் கடுமையான அகதிகள் கொள்கை காரணமாக மனுஸ் மற்றும் நவுருத்தீவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு உதவும் விதமாக ஆப்ரேஷன் #NotForgotten என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் அந்த அகதி. இதன் மூலம், அங்கு உள்ள 200க்கும் மேற்பட்ட அகதிகளை ஸ்பொன்சர் மூலம் கனடாவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்காக ஒவ்வொரு அகதிக்கும் 18,400 டொலர்கள் என 3.68 மில்லியன் டொலர்கள் திரட்டும் நோக்கத்தில் நிதி சேகரிக்கும் பணி நடந்து வருகின்றது. தற்போதைய நிலையில் 174,000 டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 111,000 டொலர்கள் ஆவுஸ்திரேலியர்களால் வழங்கப்பட்டுள்ளது என சிரிய அகதியான அல் கோண்டர் தெரிவித்திருக்கிறார். 

இந்த முன்னெடுப்பை ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் வசிக்கும் இலங்கை அகதியான சமிந்தா கணபதி வரவேற்றுள்ளார். “எந்த நம்பிக்கையுமின்றி கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு சிக்கியிருக்கிறோம். மனுஸ்தீவில் உள்ள  பெரும்பாலான அகதிகள் அமெரிக்க மீள்குடியேற்ற திட்டத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள்,” எனக் கூறியிருக்கிறார். 

ஆவுஸ்திரேலியாவின் கடுமையான தடுப்பு கொள்கைகள் சர்வதேச சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறியுள்ள சிரிய அகதி அல் கோண்டர், “தனது நோக்கம் அரசாங்கத்தை பகிரங்கமாக அவமானப்படுத்துவது அல்ல” எனத் தெரிவித்திருக்கிறார்.  இப்பிரச்னையை முடிவிற்கு கொண்டு வர அரசியல் ரீதியாக அல்லாமல் மனிதாபிமான ரீதியாக பணியாற்றுவோம் என சிரிய அகதி அழைப்பு விடுத்திருக்கிறார். 

படம்: கனடா செல்ல உதவிய பெண்மணியுடன் சிரிய அகதி ஹசன் அல் கோண்டர்

படம் நன்றி: ஏபி/ பென்  நெல்ம்ஸ்